(எஸ்.ரஞ்சன்)
மட்டக்களப்பு மாவட்டம், வெல்லாவெளி சுகாதாரவைத்திய பிரிவில் உள்ள மண்டூர் பொது சுகாதாரப் பரிசோதகர் பிரிவில் பாவனைக்கு உதவாத மென்பானங்களை விற்பனைக்காகக் கொண்டுசென்ற நிறுவனத்திற்கு எதிராக களுவாஞ்சிகுடி நீதிமன்றினால் ரூ. 3,60,000 தண்டப்பணம் விதிக்கப்பட்டுத் தீர்ப்பளிக்கப்பட்டுளது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது.
மண்டூர் பகுதியில் வாகனமொன்றில் விற்பனைக்காகக் கொண்டுவரப்பட்ட 16 வெவ்வேறு வகையான மென்பான இரசாயன மாதிரிகள், மண்டூர் பொறுப்பு பொது சுகாதாரப் பரிசோதகர் கே. இளங்கோவன் தலைமையில், பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர்களான சிவசுதன், விக்னேஸ்வரராஜா மற்றும் ஜீவிதன் ஆகியோரின் ஒத்துழைப்புடன் பரிசோதனைக்காகக் கைப்பற்றப்பட்டு அரச இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கையின்படி, பெறப்பட்ட மாதிரிகளில் 04 மென்பானங்கள் மனித நுகர்வுக்குப் பொருத்தமற்றவை என்றும், தரமற்றவை என்றும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, குறித்த மென்பான உற்பத்தியாளர், பிராந்திய விநியோகஸ்தர் மற்றும் உள்ளூர் விநியோகஸ்தர் ஆகியோருக்கு எதிராக தலா மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் மண்டூர் பொது சுகாதாரப் பரிசோதகர் கே. இளங்கோவனால் நேற்று (18.09.2026) களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றம், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து, நான்கு வழக்குகளுக்கும் தலா ரூ. 90,000 வீதம் மொத்தமாக ரூ. 3,60,000 (மூன்று இலட்சத்து அறுபதாயிரம் ரூபாய்) தண்டப்பணம் விதித்துத் தீர்ப்பளித்தது.
பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பினை உறுதிசெய்யும் வகையில் மண்டூர் பொது சுகாதாரப் பரிசோதகர் பிரிவினர் மேற்கொண்ட இந்த அதிரடி நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
(எஸ்.ரஞ்சன்)

Post A Comment:
0 comments so far,add yours