மட்டக்களப்பு மாவட்டம், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இளைஞர் விவசாயத்திட்டம் கிராமத்திற்குள் புகுந்த காட்டுயானைகள், வீடுகள் மற்றும் வாகனங்களைச் சேதப்படுத்தி பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளன.
இன்று (11.09.2026)ஆம் திகதி அதிகாலை வேளையில் கிராமத்திற்குள் ஊடுருவிய காட்டுயானை ஒன்று, அங்கிருந்த வீடு ஒன்றை முற்றாக உடைத்துத் துவம்சம் செய்ததுடன், அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றையும் அடித்து நொறுக்கியுள்ளது.
அதனைத் தொடர்ந்து, அதே கிராமத்தில் மேலும் 6 வீடுகளையும் யானைகள் சேதப்படுத்தியுள்ளன.
இதற்கு முன்னதாக, நேற்று (10.09.2026) ஆம் திகதி இரவும் குறித்த பகுதியில் இரண்டு வீடுகளை காட்டுயானைகள் சேதப்படுத்தியிருந்தன.
யானைகளின் இந்தத் தொடர் தாக்குதல்களின் போது, வீடுகளிலிருந்த பொதுமக்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
முற்றாகப் பாதிக்கப்பட்ட வீடு ஏற்கெனவே இரு முறை யானைகளால் சேதப்படுத்தப்பட்ட போதிலும், இதுவரை எவ்வித நிவாரணமோ அல்லது உதவிகளோ தமக்கு வழங்கப்படவில்லை எனப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கவலையுடன் தெரிவித்தனர்.
அத்துடன், இந்த வீட்டைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் முன்னர் யானை தாக்குதலுக்குள்ளாகி, தீவிர சிகிச்சையின் பின்னரே உயிர் தப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் நடந்த இடத்திற்கு கிராம அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகள், கிராம உத்தியோகஸ்தர் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நேரில் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.
இப்பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் காட்டுயானைகளின் அச்சுறுத்தலால் உயிராபத்தும், பெரும் சொத்துச் சேதங்களும் ஏற்பட்டு வருவதால், காட்டுயானை தாக்குதல்களிலிருந்து கிராமங்களைப் பாதுகாக்க சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து நிரந்தரத் தீர்வினைப் பெற்றுத்தர வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நஷ்டஈட்டினை விரைவாக வழங்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
(எஸ்.ரஞ்சன்
Post A Comment:
0 comments so far,add yours