மட்டக்களப்பு மாவட்டம், போரதீவுப்பற்று பிரதேச சபையின் ஏற்பாட்டில், பொதுமக்கள் நலன் மேம்பாட்டுத் திட்டம் – 2026 இன் கீழ் தெரிவுசெய்யப்பட்ட 100 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மகப்பேறு சத்துணவு வழங்கும் நிகழ்வு (18.11.2026)ஆம் திகதி புதன்கிழமை காலை 9.30 மணியளவில் வெல்லாவெளி கலைச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
போரதீவுப்பற்று பிரதேச சபையின் சொந்த நிதியிலிருந்து 8 இலட்சம் ரூபாய் ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தின் ஊடாக, தெரிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு கர்ப்பிணித் தாய்க்கும் தலா 8,000 ரூபாய் பெறுமதியான போசாக்குப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வுக்கு போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் வி. மதிமேனன் தலைமையில் இடம் பெற்றன.இதன்போது பிரதேச சபையின் உப தவிசாளர் த. கயசீலன், பிரதேச சபையின் செயலாளர் ச. விஜிதராஜா, பிரதேச சபை உறுப்பினர்கள், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வெல்லாவெளி வட்டார அமைப்பாளர் பெ. பிரதீப்குமார், பிரதேசசபையின் முன்னால் உறுப்பினர் ம.சுகிகரன் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
மேலும், இத்திட்டத்தின் பயனாளிகளான கர்ப்பிணித் தாய்மார்களும் நிகழ்வில் பங்கேற்று போசாக்குப் பொதிகளைப் பெற்றுக்கொண்டனர்.
போரதீவுப்பற்று பிரதேச சபையினால் இவ்வாறான போசாக்கு மேம்பாட்டுத் திட்டம் ஒவ்வொரு வருடமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கர்ப்பிணித் தாய்மார்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதுடன், எதிர்கால சந்ததியினரின் ஆரோக்கியமான வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலும் இத்திட்டம் ஒரு முக்கியமான சமூகநலப் பணியாக அமைந்துள்ளது.
(எஸ்.ரஞ்சன்)









Post A Comment:
0 comments so far,add yours