(கனகராஜா சரவணன்)


ஏறாவூர் பொலிஸ் பிரிலுள்ள தேவதாஸ் சுரேஷ் குமார் என்பவரை கடந்த 2008ம் ஆண்டு; ஈ.பி.டி.பி யைச் சேர்ந்தவர்கள் வானில் கடத்தி சென்று கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 9  பேரில் 9 வது எதிரியை விட்டுவிட்டு விடுதலை செய்ததுடன் ஏனைய 8 பேருக்கும் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் இன்று வியாழக்கிழமை (19) மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

கடந்த 2008 ம் ஆண்டு ஜீன் மாதம் 19 ம் திகதி தேவதாஸ் சுரேஸ்குமார் என்பவரை வானில் ஈ.பி.டி.பி அப்போதைய செங்கலடி முகாமில் இருந்தவர்களால் கடத்தி சென்று கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு அதற்கு மேல் வாழைமரத்தை நாட்டிய சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிசாரால் ஈ.பி.டி.பி யைச் சேர்ந்த 9 பேரை கைது செய்து அவர்களுக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்.

இதனையடுத்து குறித்த வழக்கு விசாரணையின் பின்னர் 2016 ம் ஆண்டு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை இடம்பெற்று வந்ததுடன் கடத்தலுக்கு பாவித்த வானை மீட்கப்பட்டு வழக்கு விசாரணை தொடர்ந்து இடம்பெற்று வந்தது.

இதில் முதலாவது குற்றவாளியான ஈ.பி.டி.பி யைச் சேர்ந்த ரவி என அழைக்கப்படும் தர்மலிங்கம் இளமாரன், வீரக்குட்டி சேகர், விஜய் என அழைக்கப்படும் மகேந்திரராஜா வினோராஜ், ஜெக்கா என அழைக்கப்படும் யோகராசா ஜெயக்குமார், சிறி என அழைக்கப்படும் சிறிஸ்கந்தராஜா நாகநாதன், சிவா என அழைக்கப்படும் சொக்கலிங்கம் நாகராசா, அருள் என அழைக்கப்படும் அருணாச்சலம் ராமச்சந்திரன், விஜி என அழைக்கப்படும் கோவிந்தன் பிரதீபன், ஆகிய 8 பேர் குற்றவாளியாக நீதிமன்றில் இனங்காணப்பட்டு தண்டனை தீர்ப்பு அறிவிக்கப்பட்டது

இதற்கமைய இன்று வழக்கு தொடுநர் சார்பில்; அரச சட்டவாதிகளான தர்சிகா திருக்குமரநாதன், சதீஸ்காந் மோகன் ஆகியோர் தீர்ப்பு வழங்கும் போது ஆஜராகியிருந்த நிலையில் இதில் முதலாவது குற்றமாக மரணத்தை விளைவிப்பதன் பொது நோக்கமாக கொண்ட சட்டவிரோத கூட்டம் ஒன்றின் உறுப்பினர்களாக இருந்தமை தண்டணைச் சட்டக்கோவை 140 பிரிவின் கீழ் 6 மாத கால சாதாரண சிறைத்தண்டனையும்.

இரண்டாவது குற்றமாக பொது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு சட்டவிரோத கூட்டம் ஒன்றின் உறுப்பினர்களாக இருந்த ஆட்கொலை தண்டணைச் சட்டக்கோவை 296 பிரிவின் கீழ் மரண தண்டனையும்.

மூன்றாவது குற்றமாக தேவதாஸ் சுரேஷ்குமார் என்பவரின் மரணத்தை விளைவித்தன் மூலம் ஆட்கொலை தண்டணைச் சட்டக்கோவை 206  பிரிவின் கீழ் மரணதண்டனையும் என மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் இன்று வியாழக்கிழமை (19) 8 பேருக்கும் மரண தண்டனை விதித்தும் 9வது எதிரியை வழக்கில் இருந்து விடுவித்து விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

இதனை தொடர்ந்து 8 பேரையும் உடனடியாக நீதிமன்றில் இருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிட தக்கது. 
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours