Articles by "தேர்தல்"
Showing posts with label தேர்தல். Show all posts

பாராளுமன்ற தேர்தலின் ஊடாக இம்முறை மட்டக்களப்பில் இருந்து ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஊடாக இரண்டு பிரதிநிதிகளை நீங்கள் பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைத்தால் மட்டக்களப்பில் துரித அபிவிருத்து நடக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்  மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் அ.ராஜ்குமார் இன்று மட்டக்களப்பில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்  மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சார மக்கள் சந்திப்பு கூட்டம் இன்று மட்டக்களப்பு பாலமீன்மடு பகுதியில் இடம் பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்துள்ளார்.

இதன் போது வேட்பாளர்களான தம்பிப்பிள்ளை சிவானந்த ராஜா மற்றும் அன்டனிசில் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் மீனவ சமூகத்தினரை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடியதுடன் அவர்களது கருத்தினையும் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு அவர் இங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், எமக்கு இம்முறை இருவரை இங்கிருந்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க உதவுவீர்களாக இருந்தால் இங்குள்ள முகத்துவாரத்தை அகலப்படுத்து ஆழப்படுத்தித் தருவோம். அதன் ஊடாக இங்கிருக்கும் மீனவர்கள் மிகுந்த நன்மையை அடையலாமென்றும் கருத்து தெரிவித்திருந்தார்.





தமிழ் மக்கள் ஒரு மாற்றத்தினை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள், மக்களின் தீர்ப்பே இறுதியானது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான அருள்மொழி வர்மன் தம்பிமுத்து மக்கள் சந்திப்பு நிகழ்வில் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் உதயசூரியன் உதிப்பான் என்ற நம்பிக்கை மக்களிடத்தில் ஏற்பட்டுள்ளது, நாங்கள் தேர்தல் பிரச்சாரங்களுக்கு செல்லும் இடங்களில் மக்களின் ஆதரவு பெருகி வருவதை காணக் கூடியதாக உள்ளது. இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் உதயசூரியனும் ஒரு பலம்மிக்க சக்தியாக காணப்படும். நாங்கள் ஆசனங்களை  பற்றி  பேசும் போது ஒவ்வொரு கட்சிகளும்  வாக்கு வங்கி அரசியலை பேசுகின்றன, வாக்கு வங்கி விடயத்தில் எமக்கு நம்பிக்கை இல்லை மக்களின் வாக்கு எவ்வரினதும் சட்டைப் பையில் இல்லை, மக்களின் தீர்ப்பே இறுதியானது.

எத்தனை ஆசனங்களை பெறுவோம், வாக்கு வங்கி என்பது பற்றி எமக்கு நம்பிக்கை இல்லை அவை தூக்கி எறியப்பட வேண்டிய விடையங்கள்.

இன்று தமிழ் மக்கள் ஒரு மாற்றத்தினை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் அது என்ன என்பதுதான் தற்போதுள்ள விடயம் , மாற்றம் என்பது தற்போது ஊழல் செய்தவர்கள் கொலைகாரர்கள் என்பவர்களை மக்கள் அடையாளம் காண வேண்டும் என்பதே தற்போதுள்ள விடயம் ஆகும், இவைகள் தான் ஒரு மாற்றமாக வரும் என நான் எதிர்பார்க்கிறேன்.

கடந்த ஜனாதிபதி தேர்தலிலே சங்கு ஒரு பொது சின்னமாக காணப்பட்டது. அங்கு நான்கு கட்சிகள் இணைந்துள்ளதுடன்  அவர்கள் தான் மாற்று வீடாக நினைக்கின்றார்கள், தொடர்ச்சியான இருப்புக்காக அவர்கள் இதனை தெரிவித்து இருக்கின்றார்கள். 

எமது கட்சி ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து இருக்கின்றது அதற்கான நம்பிக்கை என்னிடம் உள்ளதென தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமாகிய அருண் மொழிவர்மன் தம்பிமுத்து இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற போது மக்கள் சந்திப்பு நிகழ்வில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.




பாராளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் இம்முறை போட்டியிடும் லயன்ஸ் கழக உறுப்பினரும் பிரபல வர்த்தகரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இளைஞரணி செயலாளருமாகிய சண்முகலிங்கம் சுரேஸ்குமாருக்கு மட்டக்களப்பு மாவட்ட லயன்ஸ் கழகங்கள் தமது பூரண ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

இம்முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் லயன்ஸ் கழக உறுப்பினரும் சமூக செயற்பாட்டாளருமான சண்முகலிங்கம் சுரேஸ்குமாருக்கு (சம்சுங் சுரேஸ்) ஆதரவு தெரிவிக்கும் வண்ணம் நேற்றைய தினம் மட்டக்களப்பில் இடம் பெற்ற கௌரவிப்பு நிகழ்விலேயே மாவட்டத்தில் செயற்படும் லயன்ஸ் கழகங்களின் பிரதிநிதிகள் ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

கூழாவடியில் உள்ள தனியார் மண்டபமொன்றில் இடம் பெற்ற கௌரவிப்பு நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படும் லயன் கழகங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட கழக உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்ட நிகழ்வில் சமூக செயற்பாட்டாளரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருமாகிய சண்முகலிங்கம் சுரேஸ்குமார் கழகங்களின் பிரதிநிதிகளினால் பொன்னாடை போர்த்தி மலர் மாலைகள் அணிவித்து கௌரவமளித்ததுடன், அவரை வாழ்த்தி வாழ்த்துரைகள் நிகழ்த்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.










மட்டக்களப்பு மாவட்டத்தில்   பாராளுமன்ற தேர்தலுக்கான  அஞ்சல் மூல வாக்களிப்பு தினங்ளில் எந்த மாற்றமும் இல்லையெனவும், ஏற்கனவே திட்டமிட்ட தினங்களில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறுமெனவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 14 திகதி இடம் பெறவுள்ள பாராளுமன்ற பொது தேர்தலை முன்னிட்டு நாளைய தினம் (30) திகதி  தபால் மூல வாக்களிப்பிற்காக மாவட்ட செயலகம், பொலிஸ் நிலையங்கள் மற்றும் தேர்தல் அலுவலகம் ஆகியவற்றில் தபால் மூல வாக்களிப்பு இடம் பெறுவதற்கான முன்னாயத்த ஏற்பாடுகள்  பூர்த்தியாகியுள்ள நிலையில், குறித்த தினங்களில் மாற்றம் ஏற்படவுள்ளதாக போலிச் செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், அவ்வாறான செய்திகள் உண்மைக்குப் புறம்பான செய்திகள் எனவும், ஏற்கனவே திட்டமிட்டபடி தபால் மூல வாக்களிப்பிற்காக தேர்தல் திணைக்களத்தினால் ஒதுக்கப்பட்ட தினங்களில் குறித்த காரியாலயங்களில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் எனவும்,  தபால் மூல வாக்களிப்பிற்காக விண்ணப்பித்த உத்தியோகத்தர்கள் குறித்த உண்மைக்கு புறம்பான செய்திகளை நம்ப வேண்டாம் எனவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எம்.பீ.எம்.சுபியான் ஆகிய இருவரும் தெரிவித்துள்ளனர்.




ஜனாதிபதித் தேர்தலில் கடமையில் ஈடுபடவுள்ள பொலிஸ் உயரதிகாரிகளை தெளிவூட்டும் செயலமர்வொன்று இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.



மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி.ஜஸ்டினா முரளீதரன் தலைமையில் இடம் பெற்ற பொலிஸ் உயரதிகாரிகளை தெளிவூட்டும் செயலமர்வானது மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் சட்டத்தரணி எம்.பி.எம்.சுபியான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (31) திகதி இடம் பெற்றது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் எதிரிமான, மாவட்ட தேர்தல் முறைப்பாட்டுப் பிரிவின் உதவித் தெரிவத்தாட்சி அலுவலகர்களான திருமதி.நவரூபரஞ்ஜனி முகுந்தன், என்.ஜெகன்நாத் உள்ளிட்ட பொலிஸ் உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இதன்போது தேர்தல் கடமைகளில் ஈடுபடும் போது மேற்கொள்ள வேண்டிய முன்னாயத்த விடையங்கள் தொடர்பாகவும், தேர்தல்கள் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சட்ட திட்டங்கள் தொடர்பாகவும் இதன் போது விரிவாக தெளிவூட்டப்பட்டது.

இதன் நிறைவில் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்களினால் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரமளிக்கப்பட்ட முகவர்களுக்கும் தேர்தல்கள் சட்டம் தொடர்பாக விரிவாக தெளிவூட்டப்பட்டது.