தமிழ் மக்கள் தங்களுக்குள் உள்ள வேற்றுமைகளை மறந்து ஒன்று சேரவேண்டியதன் அவசியத்தினை முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் பிக்குமார்களின் அத்துமீறிய செயற்பாடுகள் காட்டி நிற்பதாக இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இரா.சாணக்கியன் மேலும் கூறியுள்ளதாவது, “பெரும்பான்மையின கட்சிகள் ஒருபோதும் சிறுபான்மை சமூகத்தினை அரவணைக்காது.
எமக்கான உரிமையினை நாங்கள் ஒன்றாக இருப்பதன் ஊடாகவே பெற்றுக்கொள்ளமுடியும்.
அதன்காரணமாகவே பெரும்பான்மை கட்சியிலிருந்து நான் வெளியேறி இன்று இலங்கை தமிழரசுக்கட்சியுடன் செயற்பட்டு வருகின்றேன்.
இந்த நாட்டில் அனேகமான பௌத்த பிக்குகள் பல்வேறு காலப்பகுதிகளிலும் தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொண்டு வந்திருக்கின்றனர்.
அதன்காரணமாகவே இங்கு சிலர் பௌத்த பிக்குகளை அழைத்து போராட்டங்களை நடாத்தியபோது, ஒரு சந்தர்ப்பத்தில் இந்த பௌத்த பிக்குகள் தமிழர்களுக்கு எதிராக மாறும் நிலையேற்படும் என தெரிவித்திருந்தேன்.
அவர்கள் எங்களுக்குள் ஏற்படும் பிரச்சினைகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி சிறுபான்மை சமூகங்களுக்குள் பிரச்சினைகளை ஏற்படுத்தி கிழக்கு மாகாணத்தில் தமது பெரும்பான்மையின் பலத்தினை நிரூபிக்கும் செயற்பாடுகளை கடந்த காலத்தில் மேற்கொண்டுவந்தனர்.
இன்று வடக்கிலும் தங்களது அராஜகங்களை அரங்கேற்றி தமது பலத்தினை நிரூபிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அண்மையில் மலையகத்தில் ஒரு தோட்டத்தொழிலாளியின் சடலத்தினை நீதிமன்ற கட்டளையினை மீறி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் புதைத்தமைக்காக அவரை கைது செய்து சிறையில் அடைத்த இந்த சட்டம், முல்லைதீவில் நீதிமன்ற கட்டளையினை மீறிய செயற்பாடுகளுக்கு எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
இவ்வாறான விடயங்கள், நீதித்துறை மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் பிக்குமார்களின் செயற்பாடுகள் இந்த நாட்டில் உள்ள தமிழ் மக்களுக்கு ஒரு செய்தியை சொல்லியுள்ளது.
தமிழர்கள் அனைவரும் தங்களுக்குள் உள்ள வேற்றுமைகளை மறந்து ஒன்றுசேரவேண்டிய சந்தர்ப்பாக இதைக் கருத வேண்டும்.

Post A Comment:
0 comments so far,add yours