( துறையூர் தாஸன் )


முன்பள்ளி கல்விச் சேவையினை சமூகத்தில் சிறப்பாக முன்னெடுத்து வருகின்ற அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்களை சமூகமும் பெற்றோரும் மறந்துவிடலாம். ஆனால் முன்பள்ளி சிறார்கள் தனது வாழ்நாளில் ஒருபோதும் மறக்கமாட்டார்கள் என, மட்டு மாவட்டச் செயலக பாலர் பாடசாலை கல்விப்பணியக செயலாற்றுப் பணிப்பாளர் எஸ்.சசிகரன் தெரிவித்தார்.


களுவாஞ்சிக்குடி சாயி பாலர் பாடசாலையின் விடுகை விழா, பாடசாலை தலைவர் க.விக்னேஸ்வரன் தலைமையில் சீ.மு.இராசமாணிக்கம் ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தொடர்ந்து உரையாற்றுகையில்,

உலக நாடுகளிலே
ஆரம்ப பிரிவு, இரண்டாம் பிரிவை விடுத்து முன்பள்ளிக் கல்விக்கு தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு மிகவும் அதிகபட்ச சம்பளம் வழங்கப்படுவதுடன் முக்கியத்துவமும் கொடுக்கப்படுகின்றது. எங்களுடைய நாட்டிலே தற்பொழுது முன்பள்ளிக் கல்வியின் முக்கியத்துவம் உணரப்பட்டிருப்பினும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பதாக கிழக்கு மாகாண சபையினால் முன்பள்ளி கல்விப் பணியகம் அமைக்கப்பட்டு மாவட்ட மட்டத்தில் மாவட்ட பணியகங்கள் உருவாக்கப்பட்டு வெளிக்கள உத்தியோகத்தர்கள், ஆளணிகள் நியமிக்கப்பட்டு சிறந்த முறையிலே முன்பள்ளிகள் பரிபாலனம் செய்யப்பட்டு வருகின்ற வகையிலே முன்பள்ளி சிறார்களின் சிறப்பான திறன் ஆளுமை செயற்பாடுகளை காணக்கூடியதாக இருக்கின்றது.



இருப்பினும் எங்கள் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கொடுக்கப்படுகின்ற வேதனம் மிகவும் சொற்பமானது. இது அவர்களுக்கு போதுமானதாக இல்லை. அதனால்தான் பெற்றோர்களிடமிருந்து பெறுகின்ற கொடுப்பனவைப் பெறுவதற்கும் நாங்கள் அனுமதித்திருக்கின்றோம். உண்மையில் என்னுடைய காலப்பகுதியிலே முன்பள்ளிகளை அரசாங்கத்திற்குள் முழுமையாக உள்வாங்க வேண்டுமென முயற்சித்துக்கொண்டிருந்தேன். ஆனால் அது தற்போதைக்கு முடியுமோ என்ற நிலைப்பாட்டில் இருக்கிறது. எதிர்காலத்திலே நான் ஒரு அரசியல்வாதியாக வரும் வேளையில் முன்பள்ளிகளை அரசாங்கத்திற்குள்ளே உள்வாங்கி முன்பள்ளிக் கல்வியின் முக்கியத்துவத்தை உயர்த்துவதற்கு பாடுபடுவேன்.


எந்த மாவட்டப் பணிப்பாளரும் இறங்கி வேலை செய்ய முடியாதளவுக்கு மாவட்டத்தில் இருக்கின்ற முன்பள்ளிகளை தரிசித்து,
கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக தொடர்ச்சியாக
அநேகமான நிகழ்வுகளிலே பங்குகொண்டிருக்கின்றேன்.

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்பது போல அவர்கள் எந்த பாவமும் அறியாதவர்கள். அன்னையின் கருவிலிருந்து பரிசுத்தமாக பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் நல்வழி காட்ட வேண்டியது பெற்றோர்களே. வெறுமனே மூன்று மணித்தியால முன்பள்ளிக் கல்வியில் ஆளுமை விருத்தி செயற்பாடு மாத்திரமே இடம்பெறுவதே முன்பள்ளிக் கல்வியின் நோக்கமாகும். ஆனால் பெற்றோர்களாகிய நீங்கள் முன்பள்ளிக் கல்வி முறைமையினை தவறாக புரிந்துகொண்டிருக்கின்றீர்கள். முன்பள்ளிக் காலத்தில் குழந்தைகளுக்கு கற்பிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இவர்களுடைய குறிப்பிட்ட பாலர் பாடசாலை காலப்பகுதியில் சிறார்கள் மத்தியிலே காணப்படுகின்ற சிறப்பான ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறமைகளை வெளிக்கொணர்கின்ற பாடசாலைதான் முன்பள்ளி கல்விக்கூடமாகும். தான் கிழக்கில் மூன்று ஆளுனர்களுடன் பணியாற்றி தற்போது நான்காவது பெண் ஆளுனருடன் கடமையாற்றும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. பெரும்பாலான முன்பள்ளி ஆசிரியர்கள் பெண்களாக இருப்பதனால் அவர்களுக்கான வேதனம் அடுத்த வருடத்தில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கின்றேன்.


குழந்தைகள் இவ்வளவு, இவ்வாறான ஆற்றல் செயல்களை செய்வார்களா என்பது சமூகத்திற்கு தெரியாது. இதனை வெளியுலகிற்கு காட்ட வேண்டிய தேவையுள்ளது. ஆனால் அரசியல் மேடைகள், அரசியல் விடயங்களையே பதிவு செய்கின்றனரே தவிர சிறார்களின் ஆற்றல் செயற்பாடுகளை வெளியுலகிற்கு எடுத்துச் செல்ல அநேக ஊடகங்கள் முன்வருவதும் கண்டுகொள்வதும் இல்லை.
இவ்வாறான சிறந்த எதிர்கால சமுதாயத்தை நிர்ணயிக்கப் போகின்ற முன்பள்ளிச் சமூகம் கிழக்கு மாகாணத்திலே இருப்பதையிட்டு பெருமையடைய வேண்டும்.



முன்பள்ளி சமூகத்தின் ஆசிரியர்கள் பாலர் பாடசாலை சமூகத்திற்காக உழைக்கின்ற பெற்றோர்கள், சமுதாயம் என ஒவ்வொருவரோடும் இணைந்து எதிர்காலத்தின் சவால்களை எதிர்கொண்டு சமுதாயத்திலே ஒரு தலைசிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கு அனைவரும் கைகோர்த்து பாடுபட வேண்டும். முன்பள்ளிகளிலே சிறார்களுக்கான விருத்திச் செயற்பாடுகள் எவ்வாறு இடம்பெறுகின்றதோ அதோ போன்று பெற்றோரும் தங்களது வீடுகளிலே பின்பற்றுவதுடன் சிறார்களினது செயற்பாடுகளை தடை செய்யாது பூரண ஒத்துழைப்பை வழங்கி, சுயமாக செயற்படுவதற்கும் தாங்களே தங்களுடைய பிரச்சினைகளை தீர்வு காண்பதற்கும் எதிர்காலத்திலே சவால்களுக்கு முகம்கொடுக்கக்கூடிய ஆற்றல்களையும் வளர்த்துக்கொள்ள பெற்றோர்கள் உதவ வேண்டும்.

குழந்தைகளை சுதந்திரமாக, குழந்தைகளை குழந்தைகளாக வாழ்வதற்கு பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும். பெற்றோர்களாகிய நீங்கள் வறுமையில் இருக்கலாம், கல்வியறிவு அற்றவர்களாக, குறைந்தவர்களாக இருக்கலாம். ஆனால் உங்களுடைய குழந்தைகளுக்கு முன்பள்ளிக்கல்வி மற்றும் தொடர்ச்சியாக ஆரம்பக் கல்வி உட்பட கல்விச் செல்வத்தை வழங்கி சமூகத்திலே ஆளுமைமிக்க ஒரு நல்ல அரசியல்வாதியாக வருவதற்கு உருவாக்குங்கள். 


இன்று எங்கள் மத்தியிலே இருக்கின்ற அரசியல்வாதிகளிலே எத்தனை பேர் ஆளுமை மிக்கவர்கள், எத்தனை பேர் தன்னாதிக்கத்தோடு தங்களுடைய அதிகாரத்தை பயன்படுத்தி எங்கள் மக்களுக்கு இத்தனை வருட காலமும் சொல்லக்கூடிய எந்தச் சேவையினை செய்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் ஆளுமை ஆற்றல் குறைவே காரணமாக இருக்கின்றது. வீர வசனம் பேசினாலும் சிறந்த ஆளுமையுள்ள அரசியல்வாதிகள் எங்கள் மத்தியில் இல்லவே இல்லை. ஆகவே சிறந்த அதிகார தலைமைத்துவமுள்ள அரசியல்வாதிகள் முன்பள்ளி சிறார்கள் மத்தியிலே உருவாக்க வேண்டும். எதிர்காலத்திலே மட்டக்களப்பு இலங்கையிலே தலை சிறந்த மாவட்டமாக திகழ வேண்டும் என்றார்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours