அறிவு

பெருந்தலைவர் அஷ்ரப்பின் மரணத்துக்கு பின்னர் முஸ்லிம் கட்சிகளும், முஸ்லிம் தலைவர்களும் முஸ்லிம் தேசிய கோட்பாட்டில் இருந்து விலகி அவர்களுக்கு என்று சாம்ராஜ்ய வட்டங்களை உருவாக்க தொடங்கி முஸ்லிம் அரசியலை வியாபார அரசியலாக மாற்றினர் என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும், சுகாதார மற்றும் போசாக்கு துறை முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஹசன் அலி தெரிவித்தார்.

ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் சம்மாந்துறை மத்திய குழுவின் அங்குரார்ப்பண நிகழ்வு  கடந்த வெள்ளிக்கிழமை சமாதான கூட்டமைப்பின் சம்மாந்துறை பிரதேச அமைப்பாளர் எம். எல். நாஸரின் தலைமையில் அவரின் இல்லத்தில் இடம்பெற்றது. தலைவராக ஏ. பி. ரகீப்,  ஐ. எல். மர்சூக், 52 நிர்வாக சபை உறுப்பினர்கள் ஒரு மனதாக தெரிவு செய்யப்பட்டனர்.

இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு பேசியபோது ஹசன் அலி மேலும் தெரிவித்தவை வருமாறு:-

ஐக்கிய சமாதான கூட்டமைப்பினராகிய நாம் இரண்டு வருட பயணத்தின் பின் சம்மாந்துறை  மண்ணில் ஒரு கிராம மட்ட மத்திய குழுவை நிறுவதற்கு போதுமான அளவு இன்று வளர்ச்சி அடைந்துள்ளோம் என்பதை இட்டு நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்த நிகழ்வு எனது ஆரம்ப கால முஸ்லிம் காங்கிரஸின் சம்மாந்துறைக்கான கட்சி நடவடிக்கைகளை மீட்டு பார்க்க செய்கிறது. தலைவர் அஷ்ரப்புடன் சேர்ந்து முஸ்லிம் காங்கிரஸை கட்சிக்கான ஆரம்ப வேலைகளை மேற்கொண்ட அந்த நாட்களை நினைவு கூருகின்றேன். 

நான் அப்போது சம்மாந்துறை தொழினுட்ப கல்லூரியில் ஒரு விரிவுரையாளராக பணியாற்றி கொண்டிருந்தேன்.    
எனது மாணவர்களான ஒரு சிலருடன்தான் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இந்த மண்ணுக்கு கொண்டு வரப்ப்ட்டது.  அந்த மாணவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் பத்திரிகைகளை விற்று கொள்கைகளை பரப்ப உதவினார்கள். 

அவர்களுள் வடகிழக்கு  மாகாணசபை உறுப்பினராக பின்னர் விளங்கிய காலம் சென்ற மன்சூர் முதன்மையானவர். அவர்களுள் இன்னும் ஒருவர்தான் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர். 
எமது இன அடையாளத்தை சகோதர இனத்தவர்கள் அங்கீகரிக்க மறுத்தனர். அதன் காரணமாக எமது தேசிய அடையாளத்தை உறுதிப்படுத்தவே நாம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை தோற்றுவித்தோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதி தமிழ் பேசும் மக்களின் நிர்வாக வசதிகள் கருத்தில் கொள்ளப்பட்டு  ஒரு மாவட்டமாக  உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் எமது அன்றைய மக்கள் பிரதிநிதிகளின் அசமந்த போக்கு காரணமாக  மட்டக்களப்பு தென்பகுதியுடன் பிந்தனப்பற்று போன்ற பிரதேசங்களும் சேர்ர்க்கப்பட்டு அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டது. 

அவ்வாறான தவறுகளை கண்டித்து தலைவர் அஷ்ரப் கரையோர மாவட்டத்தை மையப்படுத்தி முஸ்லிம் சமூகத்தின் இருப்புக்கான அரசியல் நகர்வுகளை முன்னெடுத்தார். எதிர்க்கட்சி அரசியல் மூலமாகவும், ஆளும் கட்சி அரசியல் மூலமாகவும் இதற்கு காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டார். துரதிஷ்டவசமாக அன்னாரின் திட்டமிடப்பட்ட  படுகொலை எம் சமூக இலக்கை முடக்கிவிட்டது. அதன் பின்னர் வந்த கட்சிகளும்,  தலைவர்களும் முஸ்லிம் தேசிய கோட்பாட்டில் இருந்து விலகி தங்கள் சாம்ராஜ்ய வட்டங்களை உருவாக்க தொடங்கி முஸ்லிம் அரசியலை ஒரு வியாபார அரசியலாக மாற்றினர். 

1987 ஆம் ஆண்டு நடைபெற்ற எல்லை நிர்ணயத்தில் அம்பாறை முஸ்லிம் பிரதேசங்களின் எல்லைகள் பறிக்கப்பட்டன.  அவ்வாறான ஒரு நிலைமைதான் சென்ற நல்லாட்சியிலும் நேர்ந்தது. முஸ்லிம்களுக்கு பாதகமான கலப்பு முறை தேர்தல் முறைமை கொண்டு வரப்பட்டது. வட்டார எல்லை மற்றும் மாகாண தொகுதி எல்லை என்பவற்றில் முஸ்லிம்களுக்கு குறிப்பாக அம்பாறை மாவட்ட முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட போதிலும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு ஆதரவு வழங்கினார்கள். 

பிரதேச சபை வட்டாரம் உரிய முறையில் அமைக்கப்படவே இல்லை என்பதுடன் அந்த வட்டார பிரிப்பு நிரந்தரம் ஆக்கப்பட்டும் விட்டது.  ஆனால் சம்மாந்துறை, கல்முனை, பொத்துவில் போன்று அம்பாறையில் மூன்று தொகுதிகள் அமைப்பதற்காக எமது பிரதேசத்தில் இருந்து 720 சதுர கிலோமீற்றரை கையப்படுத்தினார். ஆனால் இறைவனின் பேரருளால் மாகாண சபை தொகுதி எல்லை நிர்ணயம் தடைப்பட்டு தேக்க நிலையில் உள்ளது. ஆனால் தலையாட்டி பொம்மைகளாக, பேசாமடந்தைகளாக, மந்தை கூட்டங்களாக முஸ்லிம் தலைவர்கள் நடக்கின்றனர்.


இன்று முஸ்லிம் காங்கிரஸின் யாப்பு தலைவர் அஷ்ரப் உருவாக்கிய யாப்பு அல்ல. இப்போது இருப்பது வெறும் சக்கை மாத்திரமே . தலைவர் அஷ்ரப்பின் கட்டமைப்பு  இன்றைய முஸ்லிம் காங்கிரஸில் இல்லை. அரசியல் பீடம் கலைக்கப்பட்டு உயர்பீடம் 90 பேர் கொண்ட சபையாக மாற்றப்பட்டு இருக்கிறது. அதில் 58 பேரை தலைவர் நியமிக்கலாம் என்று வகுத்து உள்ளனர். அதிகாரம் உள்ள செயலாளர் நீக்கப்பட்டு இந்த ஊரை சேர்ந்தவர் பெயரளவிலான செயலாளராக நியமிக்கப்பட்டார். இன்று அவரின் நிலை என்ன? என்று சிந்தித்துபாருங்கள்.  

ரவூப் ஹக்கீம் ஆயுள் கால தலைவராக இருப்பதற்கு ஏற்ப கட்சியை கம்பெனியாக மாற்றியதனால்தான் நாம் வெளியேறி, எம்முடன் வெளியேறியவர்களுடன் சேர்ந்து இன்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பில் பயணிக்கின்றோம். தலைவர் அஷ்ரப்பின்  கொள்கைகள் மரணித்து விடக்கூடாது என்பதற்காக தலைவர் அன்று உருவாக்கி கொடுத்த அதே யாப்பை ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் யாப்பக கொண்டு இயங்குகின்றோம். ஒரே ஒரு மாற்றத்தை மாத்திரம் செய்து உள்ளோம். அதாவது தலைவர் என்ற சொல்லுக்கு பதிலாக தலைமைத்துவ சபை என்று மாற்றி உள்ளோம்..எமது முஸ்லிம் தேசியத்துக்கான பயணத்தில் தலைவரின் சிந்தனையில் உருவான கட்சி கட்டமைப்பை மீண்டும் உருவாக்கும் நோக்கில் இன்று நாம் சம்மாந்துறை மண்ணில் கூடியிருப்பது எமது பயணத்தின் இரண்டாம் பாகம் என்றே கூறவும், கொள்ளவும் வேண்டும்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours