துதி

எமது இளைஞர்களுக்கு அபிவிருத்தி, தொழில்வாய்ப்பு என்பது தேவைதான், ஆனால் தங்கள் தன்மானம் என்ற உரிமையை அடகு வைத்து எதனையும் அடைய அவர்கள் விரும்பமாட்டார்கள். மாயைகளைக் காண்பித்து அவர்களை இழுக்க முற்படுகின்றார்கள் என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் பல உதவித் திட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி இளைஞர் விவசாயத் திட்ட கிராமத்திலுள்ள வெள்ளிமலை விளையாட்டுக் கழகத்திற்கு கிரிக்கெட் சீருடைகள் இன்றைய தினம் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் சாணக்கியனினால் வழங்கி வைக்கப்பட்டது. இதன் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் பணிகள் கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம் மற்றும் விளையாட்டு போன்றவற்றை மக்களுக்கு வழங்குவதனை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அமைப்பாகும் அந்தவகையில் நகர பிரதேசங்களிலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு விளையாட்டுக்குத் தேவையான சீருடைகள், பாதணிகள், விளையாட்டு உபகரணங்கள் இலகுவில் கிடைக்கக் கூடிய வழிவகைகள் உள்ளன. ஆனால் பின்தங்கிய பிரதேசங்களில் இவ்வாறான உதவி திட்டங்களை செய்வதற்கு யாரும் முன்வருவதில்லை. அந்த வகையில் எமது அமைப்பின் ஊடாக இளைஞர்களைப் பலப்படுத்துவதோடு, எமது கல்வியை வளர்க்க வேண்டும். எமது எதிர்காலம் கல்வியிலேயே தங்கியுள்ளது கல்வி வளர்ச்சியின் ஊடாகத்தான் எமது எதிர்காலத்தை நாங்கள் கட்டியெழுப்ப முடியும். 

தற்போது எதெற்கெடுத்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிப்பதற்குப் பலர் புறப்பட்டுள்ளனர். ஆனால் விமர்சனங்களை உள்வாங்கிக் கொண்டு மக்களுக்காக செயற்பட்டு வரும் ஒரே ஒரு கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமே. தற்கால இளைஞர்களுக்கு வரலாறு தெரியாது, அவர்களுக்கு அபிவிருத்தி, தொழில்வாய்ப்பு போன்ற மாயைகளைக் காட்டி தங்கள் பக்கம் இழுத்துவிடலாம் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்குத் தெரியாது தற்கால இளைஞர்கள் எந்தளவுக்கு எமது வரலாறுகளை விளங்கியிருக்கின்றார்கள் என்று. அவர்களுக்கு அபிவிருத்தி, தொழில்வாய்ப்பு என்பது தேவைதான் ஆனால் தங்கள் தன்மானம் என்ற உரிமையை அடகு வைத்து எதனையும் அடைய அவர்கள் விரும்பமாட்டார்கள். இதனை அனைவரும் விளங்கிக் கொள்ளும் காலம் வரும். அந்த உரிமையை என்றாவது எம் மக்கள் சுவாசித்து விட மாட்டார்களா என்று அயராது உழைத்துக் கொண்டிருக்கும் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாகப் போட்டியிடுகின்ற பாராளுமன்ற உறுப்பினர் மட்டும் தான் தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் குரல் கொடுப்பார். கல்முனை பிரதேச செயலக தரம் உயர்த்த கோரி தமிழருக்கு ஆதரவாக இருந்த பௌத்த பிக்கு முல்லைதீவு நீராவி பிள்ளையார் ஆலய பகுதியில் பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்ட போது தமிழர்களுக்கு எதிராகச் செயற்பட்டார். கல்முனை விவகாரத்தில் அப்பிக்குவுடன் ஆதரவாக செயற்பட்ட தமிழ் பிரதிநிதிகள்; முல்லைதீவு விவகாரத்தில் அப்பிக்கு செயற்பட்ட போது எந்தவித கருத்தையும் சொல்லவில்லை, அவர்களால் எதிர்க்கவும் முடியவில்லை. கல்முனை விவகாரத்திலும் சரி, நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரத்திலும் சரி தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமே குரல் கொடுத்தது, அந்த விடயங்கள் தொடர்பில் செயற்பட்டும் வந்தது என்று தெரிவித்தார்.







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours