மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் ஹர்தால் அனுஸ்டிப்பு வர்த்தக நிலையங்கள் கடைகள் மூடி இயல்பு நிலை பாதிப்பு

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களை மட்டக்களப்பிற்கு அழைத்துவருவதை எதிர்த்து மட்டக்களப்பில் இன்று (12) பூரண கர்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை  பாதிக்கப்பட்டுள்ளது. 

உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களை அல்லது கொரோனா தாக்கத்திற்கு உட்பட்டுள்ளார்களா என பரிசோதிக்க தனிமைப்படுத்தப்பட வேண்டியவர்களையும், நாட்டிற்கு வரும் வெளிநாட்டவர்களையும் மட்டக்களப்பு ரிதிதென்னை பெட்டிகளோ கெம்பசில் அமைத்துள்ள தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு அழைத்துவருவதை எதிர்த்து மட்டக்களப்பின் பல பிரதேசங்களிலும் கர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது.

கொரோனா தொற்றில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்தைக் காப்போம் எனும் தொனிப்பொருளில் தமிழ் உணர்வாளர் அமைப்பு விடுத்த அழைப்பின் பேரிலேயே இக்கர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு, காத்தான்குடி, ஏறாவூர் செங்கலடி, கிரான், ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை போன்ற பிரதான நகரங்களிலும் சகல வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுக் கர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது. 

இதேவேளை பாடசாலைகள் திறந்திருந்தும் மாணவர்களின் வருகை மிகக் குறைவாகக் காணப்படுகின்றது. அரச நிறுவனங்கள் இயங்குகின்றபோதும் அங்கு சேவைபெற பொதுமக்கள் பெரிதும் வராததன் காரணமாக அலுவலகங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. அரச போக்குவரத்து வழமை போன்று இயங்குகின்றபோதிலும் உள்ளுர் சேவைகள் இடம்பெறவில்லை. மக்கள் நடமாட்டமின்மையால் வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. அரச அலுவலகங்களில் பொலிசாரும், வீதிகளில் இரானுவம் மற்றும் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

2020 பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யும் முதல்நாளாகிய இன்று சகல ஏற்பாடுகளும் பூர்ததியான நிலையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் தயார் நிலையில் இருந்தும் எதுவித அரசியல் கட்சிகளோ, சுயேச்சைக் குழுக்களோ வேட்பு மனுத் தாக்கல் செய்ய சமுகம்தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours