( வி.ரி.சகாதேவராஜா)

அன்ரிஜன் சோதனை செய்யப்பட்ட ஆலயநிருவாகிகள் மற்றும் சடங்குநடாத்துபவர்கள் பத்துப்பேர் மாத்திரம் கலந்துகொண்ட கடல்தீர்த்தம் கொணர்ந்து கல்யாணக்கால் முறித்துஆலயத்தில் நடும்  முதல் நாள் நிகழ்வு நேற்று நடந்தேறியது.
இந்நிகழ்வு வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்திச்சடங்கில் வரலாற்றில் முதல்தடவையாக அன்ரிஜன் சோதனையின்பின்னர் நேற்று(17)திங்கள் மாலை இடம்பெற்றது.

ஆலயதர்மகர்த்தாக்களுள் ஒருவரான இரா.குணசிங்கம் தலைமையிலான கப்புகன் கங்காணி உள்ளிட்ட இந்தப்பத்துபேர் கொண்ட குழுவினர் மாத்திரமே சுகாதாரவிதிமுறைகளுக்கிணங்க முகக்கவசமணிந்து கடலுக்குச்சென்று கடல்தீர்த்தம் கொணர்ந்து கல்யாணக்கால் முறித்து ஆலயத்தில் கூறை அணிவித்து நட்டனர்.
கொரோனா தாக்கத்தால் இம்முறை பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் .அத்துடன் நேர்த்திகளுக்கும் அனுமதியில்லை என்று ஏலவே அறிவிக்கப்பட்டகாரணத்தினால் பக்தர்கள் கலந்துகொள்ளவில்லை.
வைகாசி பிறந்துவிட்டால் கிழக்கின் பட்டிதொட்டியெல்லாம்  பறையொலிச்சத்தமும் குழலோசையும் கேட்கும்.' வைகாசிப்பொங்கல் 'எனும் பாரம்பரிய சடங்கு உணர்வுபூர்வமாக பயபக்தியுடன் இடம்பெறும்.

அந்தவகையில் இலங்கையில் வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு கண்ணகை அம்மனாலய வருடாந்த திருக்குளிர்த்தி சடங்கு (17)திங்கள் மாலை  திருக்கதவுதிறந்து கல்யாணக்கால் நடும் வைபவத்துடன் ஆரம்பமாகியது. எதிர்வரும் 25ஆம் திகதி செவ்வாய் அதிகாலை திருக்குளிர்த்தி பாடலுடன் நிறைவடையவிருக்கிறது.

அண்மைக்காலமாக கொரோனா தீநுண்மியின் தாக்கம் படுவேகமாக அதிகரித்துவருவதனால் பாரம்பரிய சடங்கு என்பதால் அதை கிரமமாக அனைத்து சம்பிரதாயங்களையும் செய்வதற்கு ஆலயநிருவாகிகள் பத்துப்பேருக்கு மட்டுமே வழமைபோல பாரம்பரிய சடங்கு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்களும் அன்ரிஜன் செய்யப்பட்டு சடங்குகாலத்தில் ஆலயத்தில் பூரணமாகத் தங்கியிருந்து அதனைச்செய்யவேண்டும் என  கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

கற்பூரச்சட்டி ஏந்துதல் அங்கப்பிரதட்சணம் செய்தல் காவடி எடுத்தல் முதலான சகல நேர்த்திகள் செய்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது.


கடைகளுக்கும் ஏனைய ஊர்வலம் மற்றும் வெளிவிடயங்களுக்கும் தடைசெய்யப்பட்டுள்ளது.பக்தர்கள் வீட்டிலிருந்தவாறே அம்மனை வணங்கலாம் எனக்கூறப்பட்டுள்ளது.  






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours