(வெல்லாவெளி தினகரன் நிருபர்-க.விஜயரெத்தினம்)
இலங்கையானது சீனாவின் மாகாணம்போன்று செயற்படுவதை மேற்குலக நாடுகளுக்கோ, இந்தியாவுக்கோ விரும்பத்தகாத செயலாக உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
வடகிழக்கில் சீனர்களின் ஆதிக்கத்திற்கு இந்த அரசாங்கம் இடமளிக்கின்றது என்றால் நேரடியாக அது இந்தியாவின் பாதுகாப்பினை அதுபாதிக்கும் என்னும் வகையில் நேரடியாக இந்தியாவின் பகையினை சம்பாதிக்ககூடிய நிலையினையே இந்த அரசாங்கம் ஏற்படுத்திவருகின்றது எனவும் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,
கொரனா காரணமாக இந்த நாட்டின் நிலைமை மிக மோசமாக சென்று கொண்டிருக்கின்றது.தொற்றுநோய்க்கான இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே ஒரு அறிக்கை விடுகின்றார்,கொவிட் செயலணிக்கான பொறுப்பான இராணுவத்தளபதி சவேந்திரா சில்வா வேறுவிதமான அறிக்கை விடுகின்றார்.சுகாதார அமைச்சர் இன்னுமொரு அறிக்கைவிடுகின்றார்.நாட்டு மக்கள் தற்போதைய நிலையில் குழப்பான நிலையிலிருந்து கொண்டுள்ளனர்.
இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளேயின் அறிக்கையின்படி அல்பா,டெல்பா சில வாரங்களில் பரவி ஆயிரக்கணக்கானோர் இறக்கும் நிலையேற்படும் என்று கூறுகின்றார்.முதலாம் இரண்டாம் அலையினை ஊரடங்கு சட்டத்தினை அமுல்படுத்தி கொரனா தொற்றினை ஓரளவு கட்டுப்படுத்தினார்கள்.மூன்றாவது அலையில் பயணக்கட்டுப்பாடு என்று கூறி ஒரு நகைச்சுவையான நாடகம் நடைபெற்றுவருகின்றது.
ஆடைத்தொழிற்சாலைகள் கிராம புற பொருளாதாரத்தில் வளர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் மூன்றாவது அலையில் கொரனாவினைக்கொண்டு சென்ற பெருமை இந்த ஆடைத்தொழிற்சாலைகளுக்குத்தான் கிடைத்துள்ளது.
கொரனாவினால் வாகரை பிரதேசம் பாதிக்கப்படாமலிருந்தது ஆனால் கடந்த பத்து தினங்களாக அதிகமானோருக்கு கொரனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அந்த பிரதேசத்திலிருந்து தம்பலகாமம்,கந்தளாய் பகுதிகளில் உள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றுவருபவர்களினால்தான் கொரனா தொற்று ஏற்பட்டுள்ளது.அரசாங்கம் இந்த கொரனா தொற்றினை ஒழிப்பதற்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தினை துரிதப்படுத்தி கொரனா தொற்றினை ஒழிக்கவேண்டும்.
ஐரோப்பிய நாடுகள்,மத்திய கிழக்கு நாடுகள் சில இலங்கையினை தங்களது சிவப்பு வலயங்களுக்குள் உட்படுத்தியுள்ளார்கள்.உயர்கல்விக்கு செல்பவர்களும் தொழில்வாய்ப்புகளை தேடுபவர்களும் விடுமுறையில் வந்தவர்களும் மீண்டும் செல்லமுடியாத நிலையில் உள்ளனர்.
அண்மையில் பொசன் விடுமுறையினை முன்னிட்டு ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பளிக்கப்பட்டு கைதிகள் சிலர் விடுவிக்கப்பட்டிருந்தனர்.அதில் 16தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலைசெய்யப்பட்டனர்.இந்த அரசியல் கைதிகளின் விடுதலைக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சந்திப்புக்கும் இடையில் தொடர்புகள் இருக்கின்றன.இலங்கைக்கு பலவிதமான அழுத்தங்கள் மேற்குநாடுகளிலிருந்து வந்துகொண்டிருக்கின்றது.இலங்கை அரசாங்கம் சீனாவினை முற்றுமுழுதாக நம்பி சீனாவின் வழித்தடத்தில் சீனாவின் ஒரு மாகாணம் போன்று செயற்படுவது மேற்குலக நாடுகளுக்கோ இந்தியாவுக்கோ விரும்பத்தகாத செயலாக இருக்கின்றது.அந்த வகையில் அமெரிக்கா காங்கிரசானது இலங்கைக்கு எதிரான,தமிழ் மக்களுக்கு சாதமான,வடகிழக்கு பிரதேசம் தமிழர் தாயகமாக ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்ற பிரேரணையொன்று முன்மொழியப்பட்டுள்ளது.
அதற்கு மேலாக விசேடமாக ஐரோப்பிய பாராளுமன்றத்திலே இலங்கையிலிருக்கும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கவேண்டும் என்ற ஒரு பிரேரணை 628 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியிருக்கின்றது.பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கவில்லையென்றால் ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை மீள்பரிசீலனை செய்யவேண்டும் அல்லது நிறுத்தவேண்டும் என்ற அழுத்தம் காரணமாக பயங்ரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட அரசியல் கைதிகளை விடுதலைசெய்யவேண்டும்,பயங்கரவாத தடைச்சட்டத்தினை மீள்பரிசீலனை செய்யவேண்டும.
இந்த நிலையில்தான் பாராளுமன்றத்தில் அமைச்சர் நாமல்ராஜபக்ஸ ஒரு அறிக்கையினைவிட்டிருந்தார்.கடந்த 16ஆம் திகதி ஜனாதிபதிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையே சந்திப்பொன்றுக்கு ஏற்பாடாகியிருந்த நிலையில் அது பிற்போடப்பட்டிருந்தது.கடந்த 24ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் நாமல்ராஜபக்ஸ,அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக பேசிய இரண்டு தினங்களில் 16அரசியல் கைதிகளை விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.இரண்டு தினங்களில் இந்த அரசியல் கைதிகள் விடுவிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை,தமிழ் தேசிய கூட்டமைப்பின் சந்திப்பு ஏற்பாட்டுக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டிருக்கவேண்டும்.பேச்சுவார்த்தை நடைபெற்றால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அழுத்தம் காரணமாக விடுதலை செய்யப்பட்டது என்று கூறப்படும் என்ற காரணத்தினால் பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டு விடுதலைசெய்யப்பட்டது.
இந்த நாட்டினை படுகுழிக்குள் தள்ளும்செயற்பாடே இந்த நாட்டிற்குள் சீனர்கள் வருகையும் அதனையொட்டி நாட்டின் பல பாகங்களிலும் அவர்களின் வேலைத்திட்டங்களும் அமைந்துள்ளது.கிறிஸ்துவுக்கு முன்பாக கட்டப்பட்ட திஸ்ஸ வாவியில் தூர்வாரல் வேலைத்திட்டத்தில் சீனர்கள் பங்குபற்றியுள்ளனர்.அங்கு சீன இராணுவத்தின் சீருடையினையொத்த சீருடையை சீனர்கள் அணிந்திருந்ததாக ஊடகங்களில் தகவல்கள் வெளிவந்தன.பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால்குணரெட்ன அவ்வாறான சீருடைகளை இனிமேல் அணியக்கூடாது என கூறியுள்ளார்.சிலவேளைகளில் அந்த சீருடையினை அணிந்தவர்கள் சீன இராணுவத்தினராககூட இருக்கலாம்.
இந்த நிலையில் இந்த நாட்டில் பிறந்துவளர்ந்த இந்த நாட்டின் மூத்தகுடிகளான தமிழ் குடிகள் வடகிழக்கில் வாழ்ந்துகொண்டிருக்கும் நிலையில் யாழ் மாநகரசபையின் முதல்வர் மணிவண்ணன் அவர்கள் மாநகரசபையின் எல்லைக்குள் வாகன தரப்பிட காவல்களுக்காக விடுதலைப்புலிகளின் சீருடையினையொத்த சீருடையினை அறிமுகப்படுத்தினார் என்று கூறி மாநகர முதல்வர் கைதுசெய்யப்பட்டதுடன் அந்த சீருடையினை அணிந்தவர்கள் நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டனர்.
இராணுவ சீருடையினை அணிந்த சீனருக்கோ அவர்களை அழைத்துவந்த நிறுவன பிரதிநிதிகளுக்கோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.எந்தவித கேள்வியுமில்லாமல் சட்டங்கள் அமுல்படுத்தப்படுகின்றது.இந்த நாட்டில் சீனர்களுக்கு இந்த அரசாங்கம் எந்தளவுக்கு முக்கியத்துவம் வழங்குகின்றது என்பதற்கு மேலாக தெற்கில் அம்பாந்தோட்டையில் தொடங்கி திஸ்ஸமகாராம,கொழும்பு போட்சிற்றி என்ற பெயரில் துறைமுக நகரத்தினை முற்றுமுழுதாக அவர்களுக்கு கொடுத்து கொழும்பு நகரில் உள்ள தொன்மைவாய்ந்த கட்டிடங்கள்,யாழ்ப்பாணத்தின் கீரிமலையில் உள்ள ஜனாதிபதி மாளிகையுடன் வடகிழக்கில் வாழ்வாதாரத்தினை நம்பியுள்ளவர்களின் அடிக்கம் செயலைக்கூட இன்று சீனர்கள் செய்கின்றனர்.இன்று ஒட்டுமொத்த நாட்டையே சீனர்களுக்கு கொடுக்கும் நிலைமை உருவாகியுள்ளது.இது இந்த நாட்டினை அழிவுப்பாதைக்கு கொண்டுசெல்லும்.வடகிழக்கில் சீனர்களின் ஆதிக்கத்திற்கு இந்த அரசாங்கம் இடமளிக்கின்றது என்றால் நேரடியாக அது இந்தியாவின் பாதுகாப்பினை அதுபாதிக்கும் என்னும் வகையில் நேரடியாக இந்தியாவின் பகையினை சம்பாதிக்ககூடிய நிலையினையே இந்த அரசாங்கம் ஏற்படுத்திவருகின்றது.
Post A Comment:
0 comments so far,add yours