நூருல் ஹுதா உமர்
அக்கறைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய எல்லைக்குள் வசிக்கும் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் இன்று முதல் (24) ஆரம்பமாகிறது எனும் நற்செய்தி மக்களை வந்தடைந்திருக்கிறது. கோவிட்-19 தீவிரத்தை இயலுமானவரை இந்நாட்டை விட்டு ஒழிப்பதற்கு அறிவார்ந்த மக்களின் முன்னால் இருக்கும் ஆக்கபூர்வமான சுகாதார பாதுகாவல் கேடயம் தடுப்பூசிகள் செலுத்துவதே ஆகும். அரசினால் கிடைத்திருக்கும் இந்த அரிய வாய்ப்பினை தேவையுடையவர்கள் கட்டாயம் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அக்கறைப்பற்று மாநகர சபை முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும்,
கொரோனா பெரும் தொற்று பரவல் நமது நாட்டிலும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஆபத்தான இத்தொற்றில் இருந்து எமது மக்களை பாதுகாத்திட சிறந்த தீர்வு தடுப்பூசிகளே ஆகும். "வெள்ளம் வருவதற்கு முன் அணை கட்ட வேண்டும்" என்பது சான்றோர் வாக்கு. அந்தவகையில், கொரோனாவின் கோரம் பெறுமதி வாய்ந்த நமது உயிர்களை ஆட்கொள்ளும் முன் நாம் தடுப்பூசி எனும் நோய் எதிர்ப்பு பாதுகாப்பு கவசத்தை தேர்ந்தெடுத்தல் அவசரமானதும், அவசியமானதுமாகும்.
கோவிட் 19 தடுப்பூசிகள் செலுத்துவதன் ஊடாக நம்மையும், நமது அன்பானவர்களையும், சுற்றத்தையும், முழு பிராந்தியத்தையும், நம் தாய் நாட்டினையும் அபாயம் மிக்க வைரஸின் பிடியில் இருந்து மீட்டெடுக்க முடியும். எனவே, பொறுப்பு வாய்ந்த ஒரு மாநகர முதல்வராய் நான் உங்களிடம் வேண்டிக்கொள்வது ஏலவே, தடுப்பூசிகள் செலுத்துவதன் அனுகூலங்கள் குறித்து சுகாதார நிபுணர்கள் போதியளவு நமக்கு அறிவுறுத்தி இருக்கின்றனர். அது போல யார் யார் தடுப்பூசியினை செலுத்திக் கொள்ள முடியும் என்கிற பூரண விபரங்களும் தரப்பட்டுள்ளன.
எனவே,பிரதேசத்தின் சுகாதார பாதுகாப்பில் முழு அக்கறையுடன் செயற்பட விரும்பும் கருங்கொடி மண்ணின் கனிவான மக்கள் கோவிட் 19 தடுப்பூசி வழங்கும் செயற்திட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பினை நல்க வேண்டுமென வினயமாக வேண்டிக் கொள்கிறேன்

Post A Comment:
0 comments so far,add yours