இலங்கை பரீட்சைத் திணைக்கள இணையதளத்தில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களது அதி விஷேட தரத்திற்கு தரம் உயர்த்துவதற்கான போட்டி பரீட்சையின் கடந்தகால வினாப் பத்திரங்களை இற்றைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் தொழிற் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக அனைத்தும் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் தொழிற் சங்கத்தின் தலைவர் ஏ.ஜி.முபாரக் மற்றும் உப செயலாளர் எம்.எம்.பைஸ் ஆகியோர் ஒப்பமிட்டு இலங்கை பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை பரீட்சைகள் திணைக்கள இணையதளத்தில் க. பொ.த. (சா/த) க.பொ.த. ( உயர்தரம்) மற்றும் நாடளாவிய சேவைகளின் கடந்த கால வினாப்பத்திரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள போதும் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களின் மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் திறமை அடிப்படையிலான அதி சிறப்பு தரத்திற்கு தரம் உயர்த்துவதற்கான போட்டிப் பரீட்சையின் கடந்த கால வினாப்பத்திரங்கள் மாத்திரம் உள்ளடக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனால் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் அதிசிறப்பு தரத்திற்கான போட்டிப் பரீட்சைக்கு தங்களை தயார் படுத்துவதில் சிரமங்களை எதிர் கொள்வதோடு குறித்த பரீட்சை வினாப் பத்திரம் குறித்த அனுபவ அறிவு, ஆற்றல் இல்லாத நிலையில் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளதால் குறித்த பரீட்சையின்  கடந்த கால வினாப் பத்திரங்களை இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Share To:

Thaayman

Post A Comment:

0 comments so far,add yours