(சுமன்)
இலாப நோக்கில் அல்லாமல் சேவை நோக்கில் வசதி குன்றியோர்க்கும் சேவை செய்யும் தனியார் வைத்தியசாலையாக சீலோம் வைத்தியசாலை திகழ்கின்றது என மகப்பேற்றியல் பெண்நோயியல் நிபுனர் வைத்திய கலாநிதி கே.ஈ.கருணாகரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு சீலோம் வைத்தியசாலை தனது 30வது அண்டு நிறைவினைப் பூர்த்தி செய்துள்ளமை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
மருத்துவ சேவை மகோன்னதமான சேவையாகும். நோயினால் வாடுவோருக்கு முதற்கண் மருத்துவராக இருப்பவர் இறைவனே அவர் தம் பிரதிநிதிகளாக பூவுலகில் மருத்துவ சேவையை வழங்குகின்றவர்களை குறிப்பிடலாம். இத்தகையோர் பணிபுரிவதற்கும் மக்கள் அச் சேவையினை பெற்று கொள்வதற்கும் மருத்துவ கட்டமைப்பு இன்றியமையாததாகின்றது.
இக் கட்டமைப்பில் கட்டடங்கள், தளபாடங்கள், மருத்துவக்கருவிகள், நவீன உபகரணங்கள், ஆய்வுகூட வசதிகள், கழிவகற்றும் பொறிமுறை என பலதரப்பட்டதும் பல்வகையானதும் அடங்குகின்றன. இவற்றினை உருவாக்கி, பொருத்தி, பராமரித்து காலத்திற்கு காலம் நவீனமயப்படுத்தி மருத்துவ சேவையினை வழங்குவது பாரியதொரு பணியென்பது கண்கூடு.
இலங்கையில் வட கிழக்கு பகுதிகளில் போர் உக்கிரமடைந்த காலப்பகுதிகளில் வளங்கள் பொருந்திய அரச வைத்தியசாலைகள் மட்டுப்படுத்தப்பட்டளவிலேயே இயங்கி வந்தமை யாவரும் அறிந்ததே. குறிப்பாக நிபுணத்துவ சேவைகள் வழங்கக்கூடிய விற்பன்னர்கள் பற்றாக்குறையாக இருந்த காலம். 1990ன் ஆரம்பத்தில் கிழக்கு மாகாணத்தில் மாபெரும் அரச வைத்தியசாலையாக திகழ்ந்திருந்த மட்டக்களப்பு பொது வைத்தியசாலையிலே விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில வைத்திய நிபுணர்களே கடமையாற்றினர். சத்திரசிகிச்சை பிரிவிற்கு “எல்லையற்ற வைத்தியர்கள்” (Medicine Sans Frontiers (MSF)) என்னும் தன்னார்வ அமைப்பை சேர்ந்த வெளிநாட்டவர்களே கடமையாற்றினர். சத்திரசிகிச்சைசேவை வழங்கலுக்கென தரமான விற்பன்னர்கள் தேவை மிகவும் அதிகமாக உணரப்பட்ட காலகட்டமது. இத்தேவையை உணர்ந்து ஒரு சில முக்கியஸ்தர்கள் செயற்பட்டனர். அக்காலப் பகுதியில் திருகோணமலை, மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயராக இருந்த பேரருட் கலாநிதி யோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை தலைமையில் குழு ஒன்று செயற்பட்டது. ஒரு தனியார் வைத்திய சாலையினை மட்டக்களப்பு மைய பகுதியில் ஆரம்பித்து கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மறை நூலாகிய திருவிவிலியத்தில் குறிக்கப்பட்டிருந்த குணமளிக்கும் ஆற்றல் கொண்டதாக கருதப்பட்ட “சிலோவாம் குளம்” என்னும் பெயரிலுள்ள சிலோவாம் என்னும் பதத்தினை முன்னிலைப்படுத்தி “சீலோவாம் வைத்தியசாலை” என்ற பெயரில் மட்டக்களப்பு லொயிட்ஸ் அவனியுவில் உள்ள கட்டடம் ஒன்றில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. காலம் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் யோசப் பரராஐசிங்கம் அவர்களுக்கு சொந்தமானதும் சுபராஐ; படமாளிகைக்கு அண்மித்ததுமாகிய கட்டடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இலங்கையில் பிரபல்யமான சத்திரசிகிச்சை நிபுணராக அரச வைத்தியசாலைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவரும் பலராலும் அறியப்பட்டவருமான வைத்திய சத்திர சிகிச்சை நிபுணர் து.வு.சேவியர் அவர்கள் இவ் வைத்தியசாலையில் முழு நேர சத்திர சிகிச்சை நிபுணராக பணியாற்றினார். ஆயர் அவர்களின் அழைப்பிற்கிணங்க உலகளாவிய ரீதியிலும் இலங்கையில் வடபுல யாழ்ப்பாணத்தில் “திருச்சிலுவை வைத்தியசாலை” எனும் வைத்திய வழங்கல் சேவை நிலையத்தின் மூலம் மருத்துவ சேவை வழங்க தகுந்த பயிற்சி பெற்ற “திருச்சிலுவை அருட் கன்னியர்கள்” (Holy Cross Sisters). இவ் வைத்திய சாலையில் பணிபுரிய வந்தார்கள். இவ் வைத்தியசாலையில் பணியாற்ற உள்ளெடுக்கப்பட்ட ஆளணியருக்கான பயிற்சிகள் மூன்றுவருட காலத்திற்கு தகுந்த பயிற்றப்பட்ட தாதியியல் பயிற்றுவிப்பாளர்களாலும் வைத்திய நிபுணர்களாலும் முறையான பயிற்சிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. சத்திர சிகிச்சை, மகப்பேறு, சிசு கவனிப்பு ஆகிய விசேட துறைகளிலும் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அத்தோடு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நிபுணர்களால் தொடர்ந்தேற்சியான பயிற்சிகளும் இவ் ஆளணியினர் பெற்றனர். இவ்வாறாக தகுந்த பயிற்சிபெற்ற ஆளணியினரை உருவாக்கி பணிபுரிந்த ஒரே தனியார் வைத்தியசாலையாக சீலோவாம் வைத்தியசாலை திகழ்ந்தது. சிறிது காலம் திருக்குடும்ப அருட் கன்னியர்கள்” (Holy Family Sisters) இவ் வைத்தியசாலையில் பணியாற்றினர்.
மட்டக்களப்பு புகையிரதநிலைய வீதியில் பிரபல்யமாக இயங்கி கொண்டிருந்த வின்சன்ட் மருத்துவமனை 2000 – 2002 ஆண்டுகளில் ஆயர் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. இதுவரை காலமும் ஏனையவரின் கட்டடத்தில்; இயங்கி வந்த சீலோவாம் மருத்துவமனையை சொந்தக் கட்டடத்தில் இயங்க வைக்க இதனால் முடிந்தது. இதன்படி 2002ம் வருடம் சீலோவாம் வைத்தியசாலை சேவைகள் வின்சன்ட் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதுடன் அண்மைக் காலம் வரை வைத்திய நிபுணர் சேவியர் அவர்களின் சேவையும் தொடர்ந்தது. அத்துடன் கடந்த 20 வருடத்திற்கு மேலாக வைத்திய நிபுணர்களின் பிரத்தியேக சேவை இவ் வைத்தியசாலைகளில் தொடர்கின்றது.
மிக இக்கட்டான கால கட்டத்தில் மட்டக்களப்பு மாநகரில் ஆரம்பிக்கப்பட்ட சீலோவாம் வைத்தியசாலையின் மூலம் மருத்;துவ பயன் பெற்றவர்கள் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட மக்களாவர். முழு நிறைவான சேவை வழங்கலில் இவ் வைத்தியசாலை அர்ப்பணிப்புடன் திகழ்ந்ததற்கு காரண கர்த்தாக்களாக இருந்தவர்களுடன் குறிப்பாக வைத்திய சத்திர சிகிச்சை நிபுணர் சேவியர் அவர்கள் திருச்சிலுவை அருட் கன்னியர்கள் மற்றும் பயிற்றப்பட்ட ஆளணியினரும் ஆவர். இவர்களுக்கு உறுதுணையாக ஆயர் அவர்களுடைய முழுமையான பங்களிப்பையும் இங்கு குறிப்பிடுதல் பொருத்தம்.
ஏறத்தாழ 15 வருடங்களுக்கு முன் அரச வைத்தியசாலை தாதியர் ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் உள்ளிட்ட ஆளணியினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த வேளை வைத்திய சேவை மிகவும் பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில் சீலோவாம் வைத்தியசாலையானது தனது பயிற்றப்பட்ட ஆளணியினருடனும் ஆய்வு கூடம், சத்திர சிகிச்சை கூடம், பிரசவ விடுதி போன்றவற்றூடாக மக்களுக்கு தொடர்ந்து சேவை வழங்கியதும் இங்கு குறிப்பிடுதல் பொருந்தும்.
எண்ணற்ற மக்களுக்கு தரமிக்க சிகிச்சை வழங்கிய பெருமை கொண்ட இவ் வைத்தியசாலை இவ் வருடம் (2021) தனது 30 ஆண்டு நிறைவு முத்து விழாவை கொண்டாடுகின்றது.
இவ் வைத்தியசாலையின் தலைவராக மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் மேதகு யோசப் பொன்னையா ஆண்டகை அவர்களின் கண்காணிப்பில் சிலோவாம் வைத்தியசாலை இயங்குகின்றது. சீலோவாம் எனும் பெயர் மருவி “சிலோம்” என்ற பெயர் மக்கள் வாயிலும் மனதிலும் நிறைந்துள்ளது. வைத்தியசாலையினை வளர்ச்சிப்படியில் இட்டுச் செல்ல தேவையான நவீன உபகரணங்கள் சத்திரசிகிச்சை மேம்பாடு போன்றவற்றில் ஈடுபாடு காட்டப்படுகின்றது. இலாப நோக்கில் அல்லாமல் சேவை நோக்கில் வசதி குன்றியோர்க்கும் சேவை செய்யும் நிறுவனமாக இது இயங்குகின்றது. சீலோவாம் என்ற பெயரின் ஆங்கில பதமான SILOAM எனும் சொல்லின் ஒவ்வொரு எழுத்தையும் முதலெழுத்தாகக் கொண்ட சொற்களைக் கோர்த்து SERVICE IN LOVE OF ALL MANKIND எனும் சொற்றொடரை (தமிழ் மொழி பெயர்ப்பாக) “அனைத்து மனித குலத்திற்கும் அன்பிலான சேவை” எனும் விருதுவாக்கை கொண்டு இயங்குகின்ற சீலோவாம் வைத்தியசாலையானது தொடர்ந்தும் தனித்துவம் மிக்கதும், சுயமாக இயங்கக்கூடியதுமாக மருத்துவ சேவை வழங்கலை மேற்கொண்டு “மக்கள் சேவை மகேசன் சேவையாக” ஆற்ற இறையருள் இறைஞ்சி நிற்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours