நூருல் ஹுதா உமர்

அரசாங்கமும், ஆட்சியும் மாறக்கூடியது. உத்தியோகத்தர்கள் மாறலாம், ஆட்சியாளர்கள் மாறலாம் ஆனால் நாடு மாறக்கூடியதல்ல. மின்சாரம், எரிவாயு, பால்மா என்பன இல்லாமல் போனது என்பது ஒருபுறமிருக்க ஏழைகளின் வயிறு பசியாக இருக்கப்போகிறது. 500, 1000, 2000 ரூபாய் கூலிபெறும் ஒருவரின் வாழ்க்கையை நாம் பசியில்லாமல் சமப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. நாட்டில் பாலுற்பத்தியின் மீது கவனம் செலுத்துங்கள் என்று நாங்கள் எப்போதோ கூறிவந்தோம். அப்போது விமர்சனம் செய்தார்கள். இப்போது பாராளுமன்றத்தில் பாலுற்பத்தியின் மீது கவனம் செலுத்துங்கள் என்று கூறும் நிலை தோன்றியுள்ளது. என தேசிய காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார்.

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக்கின் தலைமையில் நடைபெற்ற அபிவிருத்தி தொடர்பிலான கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

எமக்கு எப்படி சோறு முக்கியமோ அது போன்று நமது பிள்ளைகளுக்கு பால் அத்தியாவசியமானது. நம்மிடம் நல்ல நீர், நிலம், விவசாயிகள் இருக்கிறார்கள் ஆனாலும் சேதனப்பசளையை பற்றி பேசிக் கொண்டிருக்கும் நாங்கள் இயற்கையான பால் உற்பத்தியை  இல்லாமலாக்கி விட்டு பால் தேவைக்காக பல மில்லியன் ரூபாய்களை செலவு செய்து பால்மாக்களை இறக்குமதி செய்கிறோம். இந்த பால்மாக்கள் ஆரோக்கியமானதா? போசாக்குள்ளதா? அதனை பாவிப்பதன் மூலம் ஏதாவது பிரச்சினைகள் வருமா? என்பது கூட தெரியாது.

நாட்டில் சாதாரண வாழைப்பழமொன்று 15 ரூபாயளவிலும், பாக்கொன்று 25 ரூபாய் அளவிலும் விற்கப்படும் நிலை உருவாகியுள்ளது. பணமிருந்தாலும் பொருளில்லாத நிலை தோன்றியுள்ளது. யாரிடம் உற்பத்தி பொருள் இருக்கிறதோ அவரே இன்று ராசா போன்றவராக உள்ளார். தயாரிப்பின் மூலப்பொருள் கூட தெரியாமல் சிறுகுழந்தைகள் உண்ணும் மேற்கத்தைய பொருட்களை விட எமது தாய்மார் தயாரித்து கொடுத்த உணவுப் பொருட்கள் ஆரோக்கியமானது. அது போன்ற உணவுப்பண்டங்களை நாம் எமது குழந்தைகளுக்கு தயாரித்து கொடுக்கவேண்டும். இன்று சந்தையிலுள்ள பழங்கள் பார்வைக்கு அழகாக உள்ளது ஆனால் ஆரோக்கியமானதா என்றால் இல்லை என்பதே உண்மை. விருந்தும், மருந்தும் பிரதேச மண்வாசனையை கொண்டு உருவாக்க வேண்டும். நாம் படைக்கப்பட்ட இடங்களை வளைத்தே எமக்கான உணவும், மருந்துகளும் உள்ளது.

நாம் எமது இயற்கையை இழந்துவிட்டு இன்று நோயாளிகளாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம். போதிய உணவில்லாமல் பட்டினியுடையவர்களாக  இருந்து கொண்டிருக்கிறோம். அதனால எமது பிள்ளைகள் மந்தப்போசணை கொண்டவர்களாக உள்ளனர். காலத்தில் நிலையை சிந்தித்து அரசினால் வழங்கப்படும் நிவாரணங்கள், உதவிகளை சரியாக பயன்படுத்தி உச்சப்பயனை நாம் அடைந்து கொள்ள வேண்டும்.

உலகில் உணவுப் பஞ்சம் ஏற்படும் ஆரூடம் கூறப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் எப்படியாவது எமது உணவுகளை நாம் தயாரித்தாகவேண்டும். வயல்களில் விவசாயம் மட்டுமின்றி துணைப்பயிர்களாக மிளகாய், வாழை போன்றவற்றையும் நாம் பயிரிட வேண்டும். எம்மால் மாட்டுப்பாலை நிறைய பெற முடிகிறது. எமது நாட்டில் நிறைய நிலம், புல்வளம் போன்ற நிறைய வளங்கள் அதற்காக உள்ளது. அதனை பயன்படுத்தி எமது பாவனைகளுக்கான சுத்தமான பாலை பெறுவது காலத்தின் தேவையாக உள்ளது. சாதாரணமான ஒரு தோட்டம் செய்பவர் 5-6 மாடுகளை வைத்துக்கொண்டு பராமரிப்பதன் மூலம் நிறைய விளைச்சல் வந்ததை நாம் கண்டுள்ளோம். நாம் எல்லோரும் ஒன்றிணைந்து பால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். எமது நாட்டில் பருவப்பெயர்ச்சி மழை பெய்கிறது, நிறைய குளங்கள், ஆறுகள் இருக்கிறது ஆனால் நீரைக்கூட நாம் பணம் கொடுத்து வாங்கி குடிக்கிறோம். இவற்றெல்லாம் பற்றி சிந்தியுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.  
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours