நாவிதன்வெளிப் பிரதேசசபையினால் முஸ்லிம் பிரதேசங்கள் புறக்கணிப்பதாக வெளியாகிய செய்தி உண்மைக்குப் புறம்பானதும், தனிப்பட்ட சிலரது சோடிக்கப்பட்ட கதையாகவும் இருக்கின்றதே தவிர எவ்வித புறக்கணிப்பும் இங்கு இடம்பெறவில்லை என நாவிதன்வெளி பிரதேசசபையின் செயலாளர்
திரு. சிவபாதசுந்தரம் பகீரதன் தெரிவித்தார்
கடந்த சனிக்கிழமை மாலைமுரசுப் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பாக விளக்கமளிக்கையிலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
கடந்த 21.10.2023 அன்று வெளியாகிய செய்தியினை மறுக்கவேண்டிய தேவை இருக்கின்றது.
அதாவது நாவிதன்வெளி பிரதேசசபையின் பதவிக்காலமானது 2023.03.19 ஆம்திகதி நள்ளிரவுடன் முடிவடைந்ததன் பிற்பாடு தவிசாளர் மற்றும் உப தவிசாளரிடம் இருந்த அதிகாரங்கள் செயலாளர் வசமாகியது.
அந்தவகையில் உள்ளூராட்சி அபிவிருத்தி உதவித் திட்டத்தின் கீழ் (LDSP) இப் பிரதேச சபையின் வேலைகளைத் தேர்ந்தெடுக்கும் பட்டியலானது பிரதேச சபையின் முன்னாள் கெளரவ தவிசாளர், உபதவிசாளர், உறுப்பினர்களால் அவர்களின் ஆளுகைக்குள் இப் பிரதேச சபை இருந்த 2022 ஆம் ஆண்டு காலப் பகுதியிலே தெரிவுசெய்யப்பட்டிருந்தன அவ்வேலைகளே தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இவ் வேலைத்திட்டங்களின் தெரிவானது பிரதேசசபை எல்லைக்குட்பட்ட 20 கிராமசேவகர் பிரிவில் வாழும் இரண்டு சமூகங்களையும் அழைத்து கூட்ட ங்களை நடாத்தி அவர்களது சம்மதத்துடனே இடம்பெற்றிருந்தனவே தவிர எவரது தன்னிச்சையான முடிவும் இதில் இடம்பெறவில்லை.
அவ்வாறு தெரிவு செய்யப்பட்டு உலகவங்கியின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக அவர்களால் அனுமதிக்கப்பட்ட வேலைகளே தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன இந்த நிலையில் முஸ்லிம் பிரதேசம் புறக்கணிக்கப்பட்டது என்பது நகைப்புக்குரியதாக இருக்கின்றது. ஏனெனில் இவ்வேலைத்திட்டங்களைத் தெரிவு செய்யும் போது முஸ்லிம்பிரதி நிதிகளும் தமிழ்ப் பிரதிநிதிகளும் ஒன்றாகவே இருந்து தீர்மானித்ததன் அடிப்படையிலே தெரிவுகள் இடம்பெற்றிருந்தன.இதனைத்தான் இன்று நாங்கள் நடைமுறைப்படுத்தி வருகின்றோமே தவிர புதிதாக எதையும் செய்யவில்லை. எனவே இப் பிரதேசசபை முஸ்லிம் பகுதிகளை புறக்கணிப்பதாகக் கூறும் விடயம் ஏற்றுக்கொள்ளமுடியாது இந்த செய்தியானது இரு சமூகங்கள் மத்தியில் முரண்பாட்டை ஏற்படுத்தி அதான் மூலம் சுயலாபம் காணும் சக்திகளுக்கான ஒரு சந்தர்ப்பமாக இருக்கலாம் எனத் தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours