(முஹம்மட்,ஹஸ்னி அஹமட்)


பொத்துவில் பிரதேசத்தில் உள்ள மூத்த அரசியல்வாதிகளும், சமூக சேவையாளர்களும் புதிதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்திருப்பது கட்சிக்கு மேலும் பலம் சேர்த்திருக்கிறது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

கடந்த வெள்ளி (19) பொத்துவிலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது உரையாற்றிய போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியானது குறுகிய காலத்தில் உருவாகி சமூகத்திற்காக நல்ல பல பணிகளைச் செய்த ஒரு கட்சியாகும். கடந்த நான்கு வருடங்கள் இந்த கட்சியும், தலைமையும் பல இன்னல்களை சந்தித்தது. கட்சியின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியோடு இல்லாமல் கட்சிக்கும் தலைமைக்கும் துரோகம் இழைத்துவிட்டு சென்றதனால் தலைமை மாத்திரம் கட்சியோடு இருக்கின்ற துர்ப்பாக்கிய நிலை கட்சிக்கு ஏற்பட்டது.

ஆனால் கட்சியின் ஆதரவாளர்கள் இந்தக் கட்சியோடுதான் இருக்கின்றனர். இன்று கட்சியோடு புதிதாக பலர் இணைந்திருப்பது கட்சிக்கு மேலும் பலமாக பார்க்கிறோம். எதிர்காலத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியோடு இணைந்து செயல்படுவதற்கு நாடு பூராகவும் பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக பொத்துவில் மக்களும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியோடுதான் இருக்கின்றர். இவ்வாறான சூழ்நிலையில் அப்பிரதேசத்தில் உள்ள மூத்த அரசியல்வாதிகளும், தேர்தல்களில் போட்டியிட்டவர்களும், அரசியல் ரீதியாக பொறுப்பு மிக்க பதவிகளை வகித்தவர்களும் இன்று எம்மோடு இணைந்திருப்பது இக்கட்சிக்கு மேலும் வலுச்சேர்த்திருக்கிறது. 
எதிர்வரும் காலங்களில் இந்த கட்சியின் ஊடாக பதவிகளைப் பெறுகின்றவர்கள் பொத்துவில் மண்ணுக்கும் மக்களுக்கும் பல்வேறு பணிகளை மேற்கொள்வார்கள் என்ற நம்பிக்கை கட்சிக்கும் தலைமைக்கும் உள்ளது என்றார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours