( வி.ரி.சகாதேவராஜா)

உலகின் மிகப்பெரிய மனிதஉரிமைமீறலாக முள்ளிவாய்க்கால் தமிழினஒழிப்பு நாளை
அடையாளப்படுத்தமுடியும். இதனை ஊழிஉள்ளகாலம்வரை எந்ததமிழனும்
மறக்கமுடியாது.மறக்கவும்மாட்டான்.

இவ்வாறு காரைதீவில் நேற்று(15) புதன்கிழமை நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றிய காரைதீவு பிரதேச சபை முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.

கொத்து கொத்தாக கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்கு நீதி வேண்டும். 
சர்வதேசம் இன்னும் தாமதிக்காமல் தலையிட்டு நீதி வழங்க வேண்டும்  என்றும் தெரிவித்தார்.

 இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச தலைவரும் முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் மற்றும் பொதுமக்கள் இணைந்து நடாத்திய மே 18 தமிழர் இன அழிப்பு நாள் முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் வாரத்தின் ஓரங்கமாக நேற்று (15) புதன்கிழமை  காரைதீவு பிரதான சந்தைக்கு முன்பாக நடைபெற்றது..


நிகழ்வில் முன்னாள் முன்னாள் காரைதீவு பிரதேச சபையின் உறுப்பினர் எஸ்.சசிகுமார் ,சக்தி மீன்பிடி சங்கத் தலைவர் கோபால், சமூக செயற்பாட்டாளர்களான கணபதிப்பிள்ளை ஹரிசன் ,வினாயகம் விமலநாதன், பிரமுகர் தம்பிராசா  உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தார்கள்.

வீதியில் சென்றவர்களுக்கு கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்..

தமிழர்களின் மனதில் நீங்காத நினைவு நாள் முள்ளிவாய்க்கால் மே 18 . தமிழினம் அழிக்கப் பட்ட நாள்.   கொத்துக்கொத்தாக கொல்லப்பட்ட எம் மாணவர்களையும் அப்பாவி தமிழர்களையும் கொன்று குவித்த மே 18 நாளை உலகத்தில் வாழ்கின்ற தமிழர்கள் ஒருபோதும் மறந்துவிட முடியாது .இந்த நினைவு நாளை மழுங்கடிக்கச் செய்து மறந்து போக வேண்டும் என்பதற்காக இங்கு யுத்த வெற்றிகள் அரசினால் கொண்டாடப்படுகின்றன. .அது எமது உறவுகளை இழந்த மக்கள் உணர்வு பூர்வமாக இறுதி மரணத்தின் போது இறுதியாக அருந்திய முள்ளிவாய்க்கால் கஞ்சி நிகழ்வேந்தலானது பல பிரதேசங்களில் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.  மாணவர்கள் அப்பாவி தமிழ் மக்கள் மீது கேட்பார் பார்ப்பார் யாரும் இல்லாமல் கடந்த 2009 ஆம் ஆண்டு கொன்று குவித்தது போல் எதிர்வரும் காலங்களில் நடந்து விடக்கூடாது என்பதற்காக இதனை நடாத்துகிறோம்.

 எதிர்வரும் காலங்களிலும் எமது எதிர்கால சிறார்கள் இதை புரிய வைக்க வேண்டிய ஒரு தார்மீக பொறுப்பு எமக்கு இருக்கின்றது .எமது மக்களுடைய பயங்கரமான மிலேச்சத்தனமான படுகொலையை செய்த இந்த ஆட்சியாளர்கள் முள்ளிவாய்க்காலில் கொத்துக்கொத்தாக துண்டு துண்டாக சிதைக்கப்பட்டு உயிர் பிரியும் போது அவர்களுடைய திட்டுக்கள் இன்று பலித்திருக்கின்றது. எம் தலைவர்கள் சொன்னது போன்று அவர்களை தெரிவு செய்த மக்களே அவர்களை இந்த நாட்டை விட்டு இந்த ஆட்சியை விட்டு விரட்டிய காலம் நடைபெற்றது .இந்த ஆத்மாக்கள் எவ்விதமான குற்றமும் செய்யாமல் தமிழர்களாய் பிறந்த காரணத்தினால் தத்தளிக்க தத்தளிக்க உயிர் பிரியும் போது அவர்களுடைய சிந்தனை  அவர்களுடைய ஆத்மாக்களினுடைய விருப்பங்கள் இன்று அரங்கேறி இருக்கின்றது. தமிழினத்தின் படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் .எமது மக்களுக்கான நீதி கிடைக்கப்பெற வேண்டும். எதிர்காலத்தில் எமது தமிழர்கள் மீது இவ்வாறான செயல்பாடுகள் இடம் பெறக் கூடாது என்பதற்காக உலகத்தில் வாழ்கின்ற தமிழர்கள் அனைவரும் முள்ளிவாய்க்கால் நினைவு நாளை உணர்வு பூர்வமாக அனுஷ்டித்து வருகின்றார்கள் .இந்த உறவுகளை இழந்த எங்களுடைய வலிகளை அடக்கி ஆண்டு இந்த  தினத்தை நினைவு கூற உறவுகளை நினைவு கூற முடியாது என்று சொல்வதற்கு இங்கு யாருக்கு உரிமை கிடையாது .உயர்நீத்த உறவுகளை ஒவ்வொரு தமிழனும் உணர்வு பூர்வமாக நினைவு கூற முடியும் .எமது தமிழர்கள் தத்தளித்து பல்லாயிரக்கணக்கான மக்கள் அழிவின் பாதையிலும் அடக்குமுறைகளிலுமே ஒடுக்கப்பட்டார்கள் கடந்த காலம். பயங்கரவாத சட்டத்தின் ஊடாக பல அப்பாவி தமிழர்களை சிறைவாசம் வைத்தார்கள். தமிழர்களுடைய நிலவளங்கள் நீர் வளங்கள் நாளுக்கு நாள் சுரண்டப்பட்டு கொண்டு வருகின்றது. எங்களுடைய வணக்க ஸ்தலங்களுக்கு பதிலாக புத்தர்கள் எழுந்த வண்ணம் வருகின்றன. எமது இனத்தின் நிலத்தையும் எமது இனத்தையும் கபளீகரம் செய்தவர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக நாங்கள் போராடி எமது இனத்தின் விடுதலைக்காகவும் எனது இனத்தின் இழப்புக்களுக்கான நீதிகளை பெறும் வரையும் எங்களுடைய நினைவு கூரல்களும் போராட்டங்களும் தொடரும் என்றார்.








Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours