விடுதலைப் போராட்ட வரலாற்றில் போராளிகளையும், போராட்டத்தையும் என்றென்றும் மதித்து வாழ்ந்த ஒரு தலைவரை இன்று நாம் இழந்துள்ளோம். மாவை சேனாதிராஜா ஐயா அவர்களின் மறைவு தமிழ்த்தேசியத்திற்கு பேரிழப்பாகும் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் தெரிவித்தார்.நேற்றைய தினம் (29) இயற்கையெய்திய இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராஜா அவர்களின் மறைவு குறித்தான இரங்கல் செய்தியின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தனது இளவயது முதல் இலங்கைத் தமிழர்களின் உரிமைக்காகப் போராடி சிறைமீண்ட செம்மலாக விளங்கும் மாவை சேனாதிராஜா அவர்கள் தனது அரசியல் காலம் முதல் தமிழ் மக்களின் விடுதலைக்காவும், உரிமைக்காகவும் குரல் கொடுத்த ஒருவர்.

ஆயுத போராட்ட காலத்திலும் சரி, அதன் பின்னரான இராஜதந்திர ரீதியான நகர்வு காலத்திலும் சரி என்று விடுதலைப் போராட்டத்தையும், போராளிகளையும் விட்டுக் கொடுக்காத மாமனிதர்.

போராளிகளின் அரசியல் பிரவேசத்தினை விரும்பி அனவரையும் ஒருமித்து செயற்படும் உளப்பாங்கு கொண்டவர். அவர்கள் கட்சி ரீதியில் ஆயிரம் பிரச்சனைகளை முகங்கொடுத்தாலும் மக்களுக்கான பணியில் அவர் பின்நின்றதில்லை.

நாம் சந்திக்கும் போதெல்லாம் முன்னாள் போராளிகளின் வாழ்வியலில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்று எப்போது கதைத்துக் கொண்டிருப்பவர். எமது கட்சியினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைப்பதற்கு பெரும்பாடு பட்டவர். ஆனால் முடியவில்லை. தற்போது நாம் கூட்டமைத்துள்ள ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியினையும், தமிழரசு மற்றும் ஏனைய கட்சிகளை ஒன்றிணைத்து தமிழர்களின் தீர்வு விடயத்தில் ஒற்றுமையான ஒரு நடைமுறையினைக் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். அவரின் எண்ணத்திற்கான ஆரம்ப நகர்வுகள் நகர்ந்துகொண்டிருக்கையில் இவரின் இப்பிரிவானது அனைவருக்கும் பாரியதொரு இழப்பென்றே சொல்ல வேண்டும்.

அவர் இறுதி நேரத்தில் கண்ட கனவினை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு தமிழ்த் தேசியம் சார் அனைத்து கட்சித் தலைமைகளுக்கும் உண்டு. முக்கியமாகத் தமிழரசுக் கட்சி இது தொடர்பில் அதிகூடிய கரிசனை கொள்ள வேண்டும்.

தற்போதைய காலசூழ்நிலையில் தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்கும் வகையில் அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து பயணிக்கும் விதமாக தமிழரசுக் கட்சி செயற்படுவதே மறைந்த மூத்த தலைவரின் ஆத்மா சாந்தியடையும் விதமான நடவடிக்கையாக அமையும் என அவர் தெரிவித்தார்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours