நூருல் ஹுதா உமர்

பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மாளிகைக்காடு மீன் சந்தைக்கு செல்லும் மாளிகா வீதியின் மாளிகா சந்தி,  கல்முனை மாநகரத்தில் அதிக சனத்தொகை நடமாட்டமுள்ள வீதிகளில் ஒன்றான வைத்தியசாலை வீதி போன்ற முக்கியமான வீதிகளில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை திருத்தப் பணிகளை செய்து முடித்துவிட்டு வீதிகளை முறையாக செப்பனிடாமல் சென்றதனால் அப்பிரதேச மக்களும், பாதசாரிகளும் பலத்த அசௌகரியங்களை தினம் தினம் எதிர்நோக்கி வருகிறார்கள்.

குறித்த வீதிகளை முறையாக செப்பனிட பொதுமக்கள் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அதிகாரிகள், ஊழியர்களை அந்தந்த சந்தர்ப்பங்களில் கேட்டுக் கொண்ட போதிலும் அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருந்து வருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கிறார்கள். இந்த வீதிகளில் இந்நாள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள், அரச உயர் அதிகாரிகளின் வீடு, அலுவலகம், பாடசாலைகள், பொது நிறுவனங்கள் என்பனவும் அமைந்துள்ளது.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான இந்த வீதிகளை கடந்த காலங்களில் இருந்த அரசாங்கங்கள் காபட் வீதியாக சீரமைத்து மக்கள் பாவனைக்கு வழங்கியிருந்த போதிலும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் இவ்வாறான பொடுபோக்கான செயல்களினால் மழை காலங்களில் பொதுமக்கள் பலத்த அசௌகரியங்களை எதிர் நோக்க வேண்டியுள்ளது. வடிகான்கள் கூட மண்களால் நிரப்பப்பட்டு வெள்ள நீர் வடிந்தோட முடியாத நிலையும் சில இடங்களில் உள்ளதை காணமுடிகிறது

இந்த விடயத்தில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபை உரிய அதிகாரிகள், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அதிகாரிகள் துரிதகதியில் கவனம் செலுத்தி வீதிகளை மக்கள் பாவனைக்கு உகந்த வகையில் திருத்தி அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours