(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

இரு புனித மஸ்ஜித்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்களின் விருந்தினர் திட்டத்தின் கீழ் 2025 ஆம் ஆண்டு ஹஜ் கடமையை நிறவேற்ற இலங்கையிலிருந்து செல்லும் பயணிகளை வழியனுப்புவதற்கான வைபவம் நேற்று (26) திங்கட்கிழமை இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல்காத்தானி தலைமையில் தூதரகத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வின் போது தூதுவர் தனது உரையில், இந்த திட்டத்திற்காக இரு புனித மஸ்ஜித்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸுக்கும், பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மானுக்கும் தனது ஆழ்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார். உலகம் முழுவதிலுமிருந்து வரும் அல்லாஹ்வின் விருந்தினர்களுக்கு, குறிப்பாக நட்பு நாடான இலங்கையிலிருந்து இம்முறை வரும் புனிதப் பயணிகளுக்கு சவூதி அரசாங்கம் வழங்கும் மிகுந்த அக்கறையையும் கவனத்தையும் பாராட்டினார். 

இந்த நன்கொடைத் திட்டத்தில் பங்கேற்க ஹஜ் புனிதப் பயணிகளின் தெரிவு கவனமாகவும் துல்லியமாகவும் செய்யப்பட்டதாக தூதவர் சுட்டிக்காட்டினார். இக்குழுவில் இலங்கையைச் சேர்ந்த பல்துறை அறிஞர்கள், இமாம்கள், கல்வியாளர்கள், ஊடகத்துறை சார் பிரபலங்கள், சமூகத்தின் முன்னணி நபர்கள், மற்றும் முஸ்லிம் சமூகத்துக்கு குறிப்பிடத்தக்க சேவைகளை வழங்குகின்ற ஆண்களும் பெண்களும் அடங்குகின்றனர். இந்த கௌரவ அன்பளிப்பானது அவர்களின் பங்களிப்புகளுக்கான அங்கீகாரமாகவும், எதிர்காலத்தில் அவர்களது சேவைக்கான ஊக்கமாகவும் அமைகிறது.

இந்தப் புனிதத் திட்டத்தில் பங்கேற்பது ஹஜ் கிரியை நிறைவேற்றுவதற்கான ஒரு பெரிய ஆன்மிக வாய்ப்பை மட்டுமல்ல, ஒரு பொறுப்பையும், நம்பிக்கையையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்றும் தூதுவர் குறிப்பிட்டார். ஹஜ் புனிதப் பயணிகள் தங்கள் தாய் நாட்டினை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறந்த தூதர்களாக இருக்க வேண்டும் என்றும், சவூதி அரேபிய அரசாங்கம் அல்லாஹ்வின் விருந்தினர்களுக்கு வழங்கும் இந்த உயர் சேவை மற்றும் முழுமையான பராமரிப்பு பொறுப்புடன் தாய்நாட்டிற்கு வெளிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும், இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் நாட்டை சிறந்த முறையில் பிரதிநிதித்துவப்படுத்தவும், தங்கள் நடத்தை மற்றும் நெறிமுறைகள் மூலம் இலங்கை முஸ்லிம்களின் கௌரவமான விம்பத்தை தொடர்ந்தேர்ச்சையாக கையிலேந்திக் கொள்ளுமாறும் , ஹஜ் புனிதப் பயணிகளுக்கான அரசின் அளப்பரிய முயற்சிகள் மற்றும் சேவைகளின் தன்மையை வெளிப்படுத்தும் உண்மையின் குரலாக இருக்கவும் கேட்டுக்கொண்டார்.

இறுதியாக, ஹஜ் பயணமானது பயணிகள் அனைவருக்கும் வெற்றியை அளிக்கவும், அவர்களின் ஹஜ்ஜை ஏற்றுக்கொள்ளவும், அவர்கள் தங்கள் தாய்நாட்டிற்கு பாதுகாப்பாக திரும்பவும் வேண்டும் என்றும் தூதுவர் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours