(ரஞ்சன்)
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு கிராமத்திற்குள் இன்று (27.02.2026) ஆம் திகதி அதிகாலை புகுந்த காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.அத்துடன் மேலும் இரு பெண்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது...
இன்று அதிகாலை வேளையில் முனைக்காடு கிராமத்தின் குடியிருப்பு பகுதிக்குள் திடீரென புகுந்த காட்டு யானை, அங்கிருந்த வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் புரிந்துள்ளது.இதன்போது, அதிகாலை வேளையில் தங்களது வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருந்த பெண்களை இலக்கு வைத்து யானை தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்தக் கோரத் தாக்குதலில் முனைக்காடு மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த 74 வயதுடைய கதிர்காமத்தம்பி - சிவபாக்கியம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், தாக்குதலுக்கு உள்ளான ஏனைய இரு பெண்கள் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் அண்மைக்காலமாக காட்டு யானைகளின் ஊடுருவல் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகின்றது.
குறிப்பாக அதிகாலை மற்றும் இரவு வேளைகளில் மக்கள் நடமாடும் பகுதிகளில் யானைகள் புகுவதால் உயிரிழப்புகள் மற்றும் சொத்து சேதங்கள் தொடர்கதையாகி வருகின்றன.
யானைகளின் இந்த அச்சுறுத்தலைத் தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Post A Comment:
0 comments so far,add yours