​கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று, 35ம் கிராமம் கண்ணபுரம், படலக்கல்லடியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அருள்மிகு ஸ்ரீ  நாராயணன்(மகா விஷ்ணு) ஆலயத்தின் வருடாந்த பிரம்ம மஹோற்சவ பெருவிழா, இன்று (26.08.2026)ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் வெகுவிமர்சையாக ஆரம்பமானது.

இவ்வாலயத்தின் கருவறையில் எழுந்தருளியுள்ள எம்பெருமானின் திருவுருவம், கருங்கல்லினால் தானாகத் தோன்றிய (சுயம்பு) அற்புத மூர்த்தியாகும் என்பது இதன் தனிச்சிறப்பாகும்.

இப் பெருவிழா  நேற்று (25.08.2026)ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை விநாயகர் வழிபாடு, கிராம சாந்தி மற்றும் அங்குரார்ப்பணம் ஆகிய கிரியைகளுடன் ஆரம்பமாகி, இன்று (26.08.2026)ஆம் திகதி காலை 8:00 மணிக்கு மங்கள கரமான சுபவேளையில் கொடியேற்றம் இடம்பெறவுள்ளது.

தொடர்ந்து உற்சவங்கள் சிறப்பாக இடம்பெற்று,  (02.09.2026)ஆம் திகதி புதன்கிழமை இரவு திருவேட்டை உற்சவமும், (04.09.2026)ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை நவகிரி ஆற்றில் தீர்த்தோற்சவமும் இடம்பெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து அன்றைய தினம் மாலை கொடியிறக்கத்துடன் மஹோற்சவம் இனிதே நிறைவுபெறும்.

உற்சவ காலங்களில் தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படவுள்ளதுடன், அபிஷேகப் பொருட்களை வழங்கி சுயம்பு மூர்த்தியான எம்பெருமானின் திருவருளைப் பெறுமாறு ஆலய அறங்காவலர் சபையினர் அனைத்து பக்தர்களையும் அன்போடு அழைக்கின்றனர்.

(எஸ்.ரஞ்சன்)








Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours