பாறுக் ஷிஹான்



மக்களின் நலனை இலக்காகக் கொண்டு ஜனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலக மட்டம் வரை விரிவுபடுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிரதேச செயலகம் திறம்படச் செயல்பட்டு அம்பாறை மாவட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

கடந்த 2025 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய சேவைகளின் ஊடாக, மருத்துவ மற்றும் மருத்துவம் அல்லாத உதவிகளைப் பொதுமக்களுக்கு விரைவாகப் பெற்றுக்கொடுப்பதில் கல்முனை பிரதேச செயலகம் முன்னின்று செயற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதி நிதியத்தின் ஊடாகச் சிறப்பாகச் சேவையாற்றிய பிரதேச செயலகங்களைப் பாராட்டி கௌரவிக்கும் கிழக்கு மாகாணக் கௌரவிப்பு நிகழ்வு, மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் (SVIAS) ராஜதுரை கேட்போர் கூடத்தில் நேற்று (12) நடைபெற்றது.

பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில், கல்முனை பிரதேச செயலகத்திற்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலகத்தின் சார்பில் நிருவாக உத்தியோகத்தர் எம்.என்.எம். றம்ஸான் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் எல். எப். ஜெஸ்லி ஆகியோர் கலந்துகொண்டு விருதினைப் பெற்றுக்கொண்டனர்.

கல்முனை பிரதேச செயலகம் ஜனாதிபதி நிதியத்தின் கீழ் இதுவரை 20 மருத்துவ உதவிகளையும், 08 மருத்துவம் அல்லாத உதவிகளையும் பொதுமக்களுக்கு விரைவாக வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

--

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours