எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

ஜனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகளைப் பிரதேச மட்டத்தில் சிறப்பாகவும் பன்முகப்படுத்தப்பட்ட வகையிலும் முன்னெடுத்த மட்டக்களப்பு மாவட்ட பிரதேச செயலகங்களைப் பாராட்டும் நிகழ்வு பிரதமரும் கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் இன்று (12) மட்டக்களப்பில் நடைபெற்றது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் (SVIAS) இராஜதுரை அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில், சபாநாயகர் கௌரவ ஜகத் விக்ரமரத்ன, கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி உள்ளிட்ட அமைச்சர்கள் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, உயர் பிரதிநிதிகள்  கலந்துகொண்டனர்.

இதன்போது, ஜனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகளை மக்கள் மட்டத்திற்கு கொண்டு சென்று, பொதுமக்களுக்கான சேவைகளை வினைத்திறனுடன் முன்னெடுத்த பிரதேச செயலகங்களின் சிறப்பான செயற்பாடுகள் பாராட்டப்பட்டதுடன், சிறப்பாகச் செயற்பட்ட பிரதேச செயலகங்களுக்கு விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இதன்படி, காத்தான்குடி பிரதேச செயலகம் முதலாம் இடத்தையும், மண்முனை வடக்கு பிரதேச செயலகம் இரண்டாம் இடத்தையும், கோறளைப்பற்று பிரதேச செயலகம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.

முதலாம் இடத்திற்கான விருதை காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜுத் அவர்களும், இரண்டாம் இடத்திற்கான விருதை மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களும் பிரதமர் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.

மூன்றாம் இடத்திற்கான விருதை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் எஸ். ராஜ்பாபு அவர்கள் பெற்றுக்கொண்டார்.

நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் நிதியத்தின் செயற்பாடுகளை மக்கள் மத்தியில் வினைத்திறனுடன் முன்னெடுப்பதில் பிரதேச செயலகங்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை பாராட்டினார்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ், பல்கலைக்கழக உப வேந்தர்கள், பீடாதிபதிகள், பணிப்பாளர்கள், பிரதேச செயலாளர்கள், அரச அதிகாரிகள்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours