காரைதீவு நிருபர் சகா
04.010.2019. நேற்று மாலை "கல்தா" திரைப்பட பாடலின் இசை வெளியீடு மிகச்சிறப்பாக அரங்கம் நிறைந்த குவைத் வாழ் தமிழர்களின் முன்னிலையில் பல ஆடல் பாடல் நிகழ்ச்சிகளோடு நடந்தேறியது.
இத்திரைப்படத்தின் இயக்குனர் திரு. ஹரி உத்ரா, ஏற்கனவே தெருநாய்கள் மற்றும் படித்தவுடன் கிழித்துவிடவும் எனும் இரண்டு சமூகப் படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கதாநாயகனாக சிவநிஷாந்த் மற்றும் கதாநாயகியாக அயிரா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த கல்தா திரைப்படத்தின் "கண்ணான கண்ணுக்குள்ள எனும் பாடலை" குவைத்தினுடைய 'கவிஞர் திரு.வித்யாசாகர்" அவர்கள் எழுதியுள்ளார். இப்பாடலை நமது சிறப்புக் கலைஞர்களான மண்ணிசைத் தம்பதியர் திருமதி. ராஜலட்சுமி மற்றும் திரு.செந்தில் கணேஷ் இருவரும் இணைந்தது பாடியுள்ளனர்.
கவிஞர் திரு. வித்யாசாகர் அவர்கள் ஏற்கனவே தனது முகில் கிரியேஷன்ஸ் மூலம் பல பாடல்களையும் வெளியிட்டு, பல புத்தகங்களையும் முகில் பதிப்பகம் வழியே அச்சிட்டு, தமிழ்கூறும் நல்லுலகிற்கு பெருமை சேர்த்தவர். இலங்கையில் ஒரு கர்ப்பிணி மருத்துவமனைக்கு இலவசமாக கழிப்பிடம் கட்டித் தந்ததும் தமிழகத்தில் மழைநாட்களில் உதவுவதுமென பல இலக்கிய மற்றும் சமூகப் பணிகளிலும் மிக ஆர்வமாக பங்குகொள்வார். சமீபத்தில் கூட இலண்டன் பாராளுமன்றம் கவிஞர் திரு. வித்யாசாகருக்கு "உலக தமிழ் அமைப்பு" சார்பாக "இலக்கியச் சிகரம்" எனும் உயரிய சாதனை விருதினை வழங்கி இங்கிலாந்து நாட்டில் வைத்து கௌரவித்தது.
இறுதியாக, ஒரு திரைப்படப் பாடலை இத்தனைச் சிறப்போடு குவைத்தில் பல உழைக்கும் தமிழரின் முன்னிலையில் வெளியிட்டு ஒரு நல்ல படைப்பாளிக்கு அரியதொரு மேடையை அமைத்துத் தந்த “குவைத் தமிழோசை கவிஞர் மன்றம், அதன் பொருப்பாளர்கள், கொடையாளர்கள், மற்றும் தொழிலதிபர் திரு.ஹைதர் அலி (டிவிஎஸ் குழுமத்தின் நிறுவனர்) அனைவருக்கும் நன்றியை நல்கி விழா இனிதே நிறைவுற்றது.



Post A Comment:
0 comments so far,add yours