ஒன்றாக பள்ளி சென்று வீடு திரும்பி, மாலையில் ஒன்று கூடி விளையாடி மகிழ்ந்திருந்த சகபாடி சூழல் நம் தலைமுறையோடு முடிவு கண்டு விட்டது. கல்வியின் அடிப்படை தனிமனித நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் அந்நடத்தை ஒரு சமூக வெளிப்பாடாகவே அமைய வேண்டும். ஆனால் இன்றைய நம் கல்வி முறைமை எந்த அளவிற்கு சமூகமய தலைமுறையொன்றை உருவாக்குகிறது என்ற வினா இக்கட்டுரைக்கான அடிப்படை எனக் கொள்வோம். பெற்றோர், குடும்பம், ஆசிரியர், பாடசாலை என்ற கட்டமைப்பை கடந்து பிள்ளைகளை சமூக மயப்படுத்துவதில் சம வயது சகபாடிகளின் பங்கு பெருந்திரளானது என்பதே உண்மை.
சிறந்த சித்திகளைப்
பெற்று உயர் பட்டம் பெற்றவர் சக மனிதர்கள், சக இனத்தவர், கலாச்சாரத்தவரை
மதிக்க தவறி சுயநல நோக்கோடு செயல்படுவாரெனில் அவர் பெற்ற கல்வியின் பூரண
தன்மை கேள்விக்கிடமாகின்றது. சிறந்த சமூக நடத்தை, ஆற்றல், பற்று உள்ள
ஒருவர் கல்வி கட்டமைப்பில் சரிவர சித்தி பெற தவருகிறான் எனில் அங்கு
அவருக்கு வழங்கப்பட்ட கல்வியே கேள்விக்கிடமாகின்றது. இந்த சமூகமயமாக்கல்
மற்றும் கல்வி சமநிலையின்மையே நம் நாட்டு அனேகமான பிரச்சனைகளுக்கு
அடிப்படையாக உள்ளது.
குண்டு சட்டியில் குதிரை ஓட்டும்
கல்வி முறையில் ஆளுமை, திறமை, பற்றி என்பவற்றை கொண்ட சமூகத்தை காட்டிலும்
பந்தய குதிரைகளே பழக்கப்படுத்தப்படுகின்றனர். துரதிஷ;டம் எங்கு
பந்தயத்தில் தோற்றுப் போகும் குதிரைகளை விட இடையில் வழிதடுமாறி இடை நின்ற
குதிரைகளே அதிகம் என்பது தான்.
'தனிநபர்கள் தான்
சார்ந்த சமூகத்தின் கலாச்சாரத்தை கற்றறிந்து கொள்கின்ற செயல்முறையே
சமூகமயமாக்கல். சமூகமயமாக்களுக்கு உட்படுத்தப்படாத எவரும் அவர் வாழுகின்ற
சமூகம் விதித்த நியமனங்களுக்கு ஏற்ப இயல்பான மனிதராக கருதப்பட மாட்டார். '
என்ற ர்யசய டயஅடிழளஇ ர்ழடடிழசn (1990) புகழ்மிக்க அறிஞர்களின் கருத்தை
நான் இங்கு முன்மொழிகின்றேன்.
நாம் பெற்று வளர்க்கும்
நம் பிள்ளைகளை சமூகமயமாக்கம் செய்வதில் குறிப்பிட்ட வயதிற்கு மேல் நம்மை
காட்டிலும் சம வயது சக பாடிகளினது பங்கு அதிகமானது. இரண்டு
தசாப்தங்களுக்கு முன்னிருந்த சகபாடி சூழலும் தற்போதுள்ள சகபாடி சூழலும்
முற்றிலும் வேறுபட்டது. இது தொடர்பாக போதுமான விளக்கம் இன்மையினாலேயே
இன்றைய பெற்றோர்கள் பிள்ளைகளின் சம வயது சகபாடி உறவிற்கு முட்டுக்கட்டையாக
செயல்படுகின்றனர்.
இங்கே நம் பாடசாலை பிள்ளைகளை நான்
ஒரு தொகுதிகளில் வைத்து பார்க்க விரும்புகிறேன். ஒன்று சுதந்திர
செயல்பாடுடைய பெற்றோரின் மிதமிஞ்சிய கட்டுப்பாட்டிற்கு உட்படாத பிள்ளைகள்.
மற்றொன்று பெற்றோரின் கடும் கண்காணிப்பில் மிதமிஞ்சிய அரவணைப்பில் வளரும்
பிள்ளைகள். இதில் இரண்டாம் வகைப்பிள்ளைகள் கற்றல் செயல்பாடுகளில் சிறப்பாக
செயல்பட்டாலும் சமூகம் சார் புரிதல் இன்றி பிற்காலத்தில் சமூகத்திற்கு
முகம் கொடுப்பதில் சிரமப்படுவதை காண முடிகிறது.
நம்
பிள்ளைகள் சம வயது சகபாடிகளை சந்திக்கும் பிரதான இடம் பாடசாலை ஆகும். ஆனால்
அங்கு பொதுவான உடை, நடத்தை, ஒழுக்கம் என ஒரு கட்டுப்பாடு பேணப்பட்டாலும்
கூட தற்கால நடைமுறையில் பிள்ளைகள் பிரத்தியேக வகுப்புகள், தான் சார்ந்த
சமூகம், ஊடகங்கள் என பரந்த அளவில் சகபாடிகளின் உறவை கட்டமைத்து
கொள்கின்றனர். குறிப்பிட்ட வயதுக்கு மேல் பிள்ளைகள் பெற்றோர், சகோதரர்,
ஆசிரியர்களை காட்டிலும் சம வயது சக பாடிகளிலேயே அதிக நம்பிக்கை
கொள்கின்றனர். காரணம் தாம் சார்ந்த ஒத்த சிந்தனை, ஒத்த செயல்பாடு,
எதிர்பார்ப்பு, விருப்பு வெறுப்பு, ஆர்வங்கள், நடத்தை என்பன சம வயது
சதபாடிகளிடமே சரளமாக கிடைத்தலாகும். அதீத சுதந்திர உணர்வு,
கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்படாமை, புதுமை நாட்டம் போன்ற மனநிலைகள்
கட்டளைமைப் பருவ மாணவர்களின் பொதுவான இயல்பாகும். இதற்கு சமவயது
சதபாடிகளின் கூட்டுணர்வு பக்கபலம் சேர்க்கின்றன.
நம்
பெற்றோர்களும் ஆசிரியர்களும் இந்நிலையினை கையாள்வதில் நடைமுறை சிக்கல்களை
சந்திக்கின்றனர். அதீத கட்டுப்பாடுகளை விதித்து யாருடனும் பழகவிடாமல்
கற்றல் செயல்பாடுகளுக்கு மட்டும் பிள்ளைகளை மட்டுப்படுத்தியும், அதேவேளை
கண்காணிப்பற்ற சுதந்திரத்தை வழங்கி தவறான வழிகளில் பிள்ளைகள் செல்வதையும்
அவதானிக்காத அலட்சியமான போக்கினையும் நம் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள்
கொண்டிருப்பதால் பொதுக் கண்ணோட்டத்தில் பார்க்கையில் நம் மாணவ
சமுதாயத்திற்கு சம வயது சசபாடிகளின் உறவு என்பது எதிர்மறையானதாக
தென்படலாம். ஆனால் இது சற்று நுணுக்கமாக ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும்.
தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ளவும், சாதனைகளை படைக்கவும், சமூக உணர்வு,
ஒற்றுமை, தேசப்பற்று, சக சமூகங்களை இனங்காணல், சமூக பேதங்களைக் கடந்து
நட்பு, உறவு, நம்பிக்கை போன்ற நிலைகளை அடைவதற்கு சம வயது சகபாடிகளின் உறவு
ஒவ்வொரு பிள்ளைக்கும் அத்தியாவசியமானது. யாருடனும் பழகாது தனித்துவிடப்பட்ட
ஒரு மாணவன் கற்றல் நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்படுவான் ஆயினும் மாணவனின்
உளவியல் நிலை குறித்து ஆராயுமிடத்து சிறந்த சமூகமயமாக்கப்பட்ட மாணவனாக
அம்மாணவன் இல்லை என்பது புலப்படும்.
சகபாடிகளின்
இன்றைய உறவாடல் நிலை முற்றிலும் மாறுபட்டுவிட்டது. றூயவள யிp
குழுமங்களுக்கும், குயஉநடிழழம Pழளவஇ வுமைவழம சுநநடள என இன்றைய மாணவர்களின்
நட்பு வட்டாரம் துரிதமாகிவிட்டது. நம் மாணவர்களின் உடை அலங்காரம், தலைமுடி
வெட்டுதல், தன்னை மற்றவர் முன்னிலையில் முன்னிறுத்துதல், மொழிநடை, சிந்தனை,
மனப்பாங்கு, மற்றவரை அணுகுமுறை, சமூக செயல்பாடுகள் என அனைத்தையும் சமவயது
சகபாடிகளே தீர்மானிக்கின்றனர்.
நடைமுறையில் வளர்ந்து
விட்ட ஊடக கலாச்சாரம், சமூக வலைதள பாவனை, பிரத்தியேக வகுப்பு கலாச்சாரம்
என்பன நகர்புற மாணவ சமூகங்களை அதிகமாக பாதித்துள்ளன. அண்மைக்காலமாக நாம்
கேள்விப்படும் சில சம்பவங்களை சிந்தித்து பார்ப்போம். மாணவரை கண்டித்த
ஆசிரியரை மாணவர் தாக்கியமை, பள்ளி இறுதி நாளில் பாடசாலை பொருட்களை
சேதப்படுத்தியமை, அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் உலா வரும் பாடசாலை
மாணவர்களின் சீர்கேடான காணொளிகள், தொலைபேசி மறுக்கப்பட்டமைக்கு கொண்டமைக்கு
தற்கொலை செய்து கொள்ளுதல், காதல் தோல்வி மன அழுத்தம் போன்ற வயதுக்கு
ஒவ்வாத காரணங்களுக்காக தற்கொலை செய்து கொள்ளுதல், சமூகவிரோத செயல்பாடுகளில்
ஈடுபடுதல், போதை பொருளுக்கு அடிமையாகுதல் மற்றும் போதை பொருள் பாவனை,
வாழ்க்கை சூழலுக்கு பொருத்தமற்ற உடல் அலங்காரங்களை செய்து கொள்ளுதல்,
எதிர்காலம், எதிர்கால தொழில் இலட்சியம் போன்ற குறிக்கோள்கள் அற்று நடைமுறை
சார்ந்த விருப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுதல் போன்ற
பல்வேறு விடயங்களை வரிசைப்படுத்திக் கொண்டே போகலாம். இதற்கும் சம வயது
சகபாடிகளின் பங்கு அல்லது போக்கு மிக மிக அடிப்படையாக அமைகின்றது என்பது
குறிப்பிடத்தக்கது.
சமூக விரோத செயல்பாடுகள்,
போதைப்பொருள் பாவனை போன்றன மாணவர்களிடையே கடத்தப்படுவதில் சம வயது
குழுக்களின் பங்கு அதிகம். இதற்கு சமூக விரோதிகளின் செயல்பாடுகள்
அடிப்படையாய் அமைந்தாலும் மாணவர் சமூகத்தில் பரவுவதில் சமவயது குழுக்களின்
பங்கு அதிகமானது. இதற்கு சமவயது மாணவர்கள் இவ்வாறான பிழையான விடயங்கள் மீது
கொண்டுள்ள பிரிய மனப்பாங்கு காரணம் எனலாம்.
அண்மையில்
பிரபல சகோதரமொழி எழுத்தாளர் நம் பிள்ளைகளின் ஒழுக்கத்தை தெரிந்து கொள்ள
வேண்டுமெனில் பாடசாலை விட்டபிறகு பஸ்தரிப்பிடங்களுக்கு வந்து பாருங்கள் என
தெரிவித்து இருந்தார். பாடசாலைகளை குறி வைத்துள்ள போதை வஸ்து, சமூக விரோத
குற்ற செயல்களை தடுக்கவும் மாணவர்களை சமூக பற்றுள்ள ஒழுக்க விழுமிய
நோக்குடைய பொறுப்புள்ள பிரஜைகளாக மாற்ற வேண்டும் எனில் சில உபாயங்களை நம்
பெற்றோர்களும் பாடசாலை கட்டமைப்பும் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
சமவயது
சகபாடிகளின் உறவு நிலைகளை தடுப்பதால் தீர்வு இல்லை. சிறந்த நண்பர்
வட்டாரத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ள பிள்ளைகளை வழிப்படுத்த வேண்டுமே அன்றி
நண்பர்களை நாமே தேர்ந்தெடுத்து கொடுக்கக் கூடாது. நண்பர்களுக்கிடையில் உள்ள
நட்பு நிலையில் வெளிப்படை தன்மையை பேணும் வகையில் பிள்ளைகளிடையே
நம்பிக்கையே வளர்த்துக் கொள்ள வேண்டும். கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில்
ஆசிரியர்களும் பாடசாலையும் சகபாடி கற்றல் உத்திகளை கையாள வேண்டும்
நடைமுறை
சார்ந்த பிரச்சினைகளை கருத்தில் கொண்டு கலைத்திட்டம் மற்றும் கற்றல்
செயற்பாடுகளில் மாணவர்களுக்கு எதிர்காலம் குறித்த சிறந்த நோக்கு, ஒழுக்க
விழுமியுங்கள், குறிப்பாக பாலியல் கல்வி, பொழுதுபோக்கு மற்றும் அழகியல்
சார்ந்த கல்வி, தேசிய பற்று மற்றும் ஒற்றுமை போன்ற கருத்தமைவுகளை கொண்ட
கல்வி முறைகளை செயல்படுத்த வேண்டும். அன்றி முன்பு குறிப்பிட்டது போல்
பரீட்சையினை நோக்கமாகக் கொண்டு ஓட்டம் போடும் மாணவ சமூகத்தை பின்னின்று
துரத்தும் கல்வி முறையாக தொடர்ந்து நீடிக்குமாயின் கல்வி -
சமூகமயமாக்கல் என்ற இரு கருத்தாடல்கள் இடையிலான ஒரு பெரும் இடைவெளி நம்
மாணவ சமூகத்தில் வெளிப்படும்.
மாணவப் பருவம் என்பது
வாழ்வில் வண்ணமிகு பருவமாகும். இதில் முக்கிய வர்ணங்கள் நட்பு நிலையிலேயே
தங்கியுள்ளன. அதனை வாழ்விற்கு சாதகமாக மாற்றும் திறமை அனைத்து
பிள்ளைகளிடமும் உண்டு என்பதை எனது நம்பிக்கை. அதற்கு தகுந்த வழிகாட்டல்களை
நம் பெற்றோர்களும் பாடசாலைகளும் வழங்கினாலே போதுமானது. இல்லையேல் கற்ற
சமூகம் சமூக பொறுப்பின்றி சுயநலப் போக்கினையும், சமூகமயமாக்கம் பெற்ற
சமூகம் கல்வியில் சிறக்க வழி இன்றி தவிப்பதனையும் என்ற இரு நிலைப்பட்ட
பேதம் நம் சமூகத்தை தொடர்ந்தும் தேக்க நிலையிலே வைத்திருக்கும்.
சுபாகரன் சதீஸ்
4ம் வருட கல்வியியல் சிறப்புக் கற்கை மாணவன்
கல்வி, பிள்ளை நலத்துறை
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை
Post A Comment:
0 comments so far,add yours